திண்டுக்கல், ஏப். 18: ஆத்தூர் முன்னிலைக்கோட்டை பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர். அம்மனுவில், ‘ஆத்தூர் ஒன்றியம், முன்னிலைக்கோட்டை ஊராட்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களின் குடியிருப்பு பகுதியில் முன்புறம் சாலையை ஒட்டியும், 100 அடி அகலம் கொண்ட யானை விழுந்தான் ஓடைக்கு அருகிலும் சிறிய அளவிலான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதன் குறுக்கே தான் எங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய பாதையும், இறப்பு மற்றும் விழா காலங்களில் வழிபாட்டுக்கு நீர் எடுத்து சடங்குகளை செய்வதற்கான கிணறும் உள்ளது.
இதை தாண்டி விவசாய நிலங்கள், கிணறுகளும் உள்ளன. இவ்வளவு காலம் பொது கிணறுகள், பாதைகள் என எதையும் பயன்படுத்த முடியாமல் நாங்கள் தனியாக பாதையையும். கிணற்றையும் பயன்படுத்தி வாழ்த்து வருகிறோம். எங்கள் மக்களுக்கு இதுவரை கழிப்பறை, குடிநீர், சாலை, தெரு விளக்கு, சமுதாயக்கூடம் எதையும் செய்து தரவில்லை. எங்கள் ஊரிலேயே இன்னும் வீடு இல்லாமல் பலர் இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் வீடுகளற்று இருக்கக்கூடிய எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் குடிசை அமைத்து பட்டா வழங்க கோரி தாசில்தாரை அணுகிய போது இது நீர் பிடிப்பு புறம்போக்கு எனவே பட்டா வழங்க முடியாது என மறுத்து விட்டார்கள்.
ஆனால் தற்போது அதை பற்றி துளியும் அக்கறை இல்லாமல் யானை விழுந்தான் ஓடையையும் ஆக்கிரமித்து அதன் அருகில் இருக்கிற நீர்வடிகால் மற்றும் நீர்பிடிப்பு பகுதியையும் அளவை செய்து தங்களின் சுய தேவைக்காக மற்றவர்களுக்கு கொடுப்பதாக தகவல் அறிந்தோம். எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.