கும்பகோணம், பிப்.26: கும்பகோணம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களுக்கு 4 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆதனூர் ஊராட்சியில் கடந்த 4 மாத காலமாக, மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 91 லட்சம் கிராமப்புற மக்களுக்கும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளிகளுக்கும் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ.1036 கோடி ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பியபடி கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி, அன்னக்கூடை மற்றும் மண்வெட்டிகளை கைகளில் 100 நாள் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான 100 நாள் விவசாய கூலி தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.