ஜெயங்கொண்டம், ஜூன் 4: ஆண்டிமடம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் வாகனங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவிற்கு உட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிமடம் வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி தலைமையில் வருவாய் துறையினர் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நான்கு வீடுகள் அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பத்தினரை திடீரென முன் அறிவிப்பு இன்றி அகற்றியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.