ஆண்டிப்பட்டி, பிப். 20: ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்துறை எஸ்ஐ முரளிதரன் தலைமையிலான போலீசார் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு ஆம்னி காரை மறித்து சோதனை செய்தபோது, அந்தக் காரில் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி வந்த தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த சக்திகுமார் (33) போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையம் வாணிபக்கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.