ஆண்டிபட்டி, ஆக. 18: ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய பகுதிகளில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்றும் நன்றி தெரிவித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய பகுதிகளான க.விலக்கு, குன்னூர், அம்மச்சியாபுரம், இந்திரா நகர், நாச்சியார்புரம், ரெங்கசமுத்திரம், சண்முகசுந்தரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தார். மேலும் திமுகவின் சாதனைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், திமுக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.