Tuesday, June 24, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?!

ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் உளவியல்பரபரப்பான பொள்ளாச்சி நகரப் பேருந்து நிறுத்தம். பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாணவிகள் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு வந்து செல்லும் இடம் அது. ஒரு சில பேருந்துகள் மட்டும் பேருந்து நிறுத்தத்திலேயே அரைமணி நேரம் நின்றிருக்கும்.கிராமப் பேருந்துகள் மணிக்கு ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்லும். காத்திருக்கும் மாணவிகள் நிற்கும் பேருந்தில் அமர்ந்து சில நிமிடங்கள் ஓய்வெடுப்பார்கள். அன்று சத்யா மட்டும் பேருந்துக்காக காத்திருந்தாள். கால்கள் வலிக்க காத்திருந்த பேருந்தில் ஏறி உட்கார்ந்தாள்.சில நிமிடங்களில் அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு இளைஞனும் பேருந்தில் ஏறினான். சத்யாவை நோட்டம் விட்டவன் வேறு யாரும் பேருந்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான். திடீரென அவன் தனது பேண்ட் ஜிப்பைக் கழற்றி தனது அந்தரங்க உறுப்பை வெளியில் எடுத்துக் காட்டினான். அதிர்ந்த அவள் பார்வையை சட்டென்று வேறு பக்கம் திருப்பினாள்.அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டாலும் தொடர்ந்து அவன் சுய இன்பம் காணும் நடவடிக்கையிலும் இறங்கினான். பயத்திலும், அருவெறுப்பிலும், குழப்பத்தோடும் அவள் பேருந்தை விட்டு அவசரமாக இறங்கி நின்றாள்.அன்றிலிருந்து நிற்கும் பேருந்தில் ஏறுவதைத் தவிர்த்தாள். இந்த விஷயத்தை வேறு யாருடனும் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை. அதனை மறக்க முயற்சித்துத் தவிர்த்தாள். சில ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்… உளவியல் மருத்துவர் ஞான மணிகண்டனிடம் கேட்டோம்…‘‘ஆண் தன் ஆணுறுப்பை பெண்ணுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டுவது பரவலாக நடைபெற்று ஒரு வகை பாலியல் குற்றமாகவே காலம் காலமாக பல்வேறு சூழல்களில் நடந்து வருகிறது. சிலர் காரில் இருந்தபடி முகவரி கேட்பது போலப் பெண்களை அழைத்து, அருகில் வந்தவுடன் ஆணுறுப்பைக் காட்டுவதும் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.பேருந்துப் பயணங்களில் கூட்டமான சூழலில் ஆண் தன் ஆணுறுப்பை பெண்ணின் உடலில் உரசும் படியாக நிற்பது, அழுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. இவற்றை கேள்விப்படும் போது நமக்கு ஒரு கோபம் ஏற்படுகிறது, இது போன்ற நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். இத்தோடு நாம் உளவியல் காரணங்களையும் ஆராய்ந்து இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும்.ஆண் பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தன் அந்தரங்க உறுப்பை வெளிக்காட்டுவது என்பது ஒரு மனநலப் பிரச்னையே. அவர்களது செக்ஸுவல் நடைமுறைகள் மற்றவர்களைத் துன்புறுத்துவது போலவும் அமையும். இவர்களை எளிதாக வகைப்படுத்த முடியும். ஆரோக்கியமான தாம்பத்ய அணுகுமுறை இல்லாதவர்கள், Non sexual முறைகளைப் பின்பற்றுபவர்கள்.சிறு வயதில் கிரிமினல் குற்றம் செய்து சிறைக்குச் சென்றவர்கள், தன்னால் வழக்கமான செக்ஸ் நடைமுறைகளைச் சரியாக செய்ய முடியாதோ என்று எண்ணுபவர்கள், Paraphilic Disorder உள்ளவர்கள், திரும்பத் திரும்ப செக்ஸ் தூண்டுதலைக் கற்பனை செய்பவர்கள், போர்ன் வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இப்படி ஆணுறுப்பை வெளிக்காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தும் பழக்கம் இருக்கலாம்.இப்படி தங்கள் உடல் உறுப்பை வெளிக்காட்டும் இந்த நோய்க்கு அரிதாக சில பெண்களும் ஆட்படுகின்றனர். தன்னை விட சிறு வயது ஆண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் பெண்களை இந்த வகையில் சேர்க்கலாம். இத்தகைய குணநலக் கோளாறு கொண்டவர்கள் அடுத்தவர்கள் செக்ஸ் உறவு கொள்வதைப் பார்த்துத் திருப்தி அடைவது, பெண்கள் குளிப்பதை வீடியோ எடுப்பது, அடுத்தவரின் படுக்கை அறையை ஒளிந்து பார்ப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள்.தர்மபுரியில் நடந்த ஒரு சம்பவத்தில், தான் உறவு கொள்ளும் பெண்களை வீடியோ எடுத்து ஒருவர் ரசித்துள்ளார் என்றும், உறவு கொள்வதை விட அதை வீடியோவில் பார்க்கும்போது அதிக திருப்தி கிடைத்ததாக வாக்குமூலமும் கொடுத்துள்ளார் என்று செய்திகள் வந்தன. இதை வாயரிசம்(Voyeurism) என்கிறோம்.பொது வெளியில் நிறைய மக்கள் கூடியிருக்கும் இடங்களில் பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆணுறுப்பைக் காட்டுதலை எக்ஸ்பிஸனிசம்(Exhibitionism) என்று உளவியலில் குறிப்பிடுகிறோம்.; இதுபோன்ற செயல்பாடுகளின் பின்னணியில் அந்த நபர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம். அவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு ஆளானவர்களாகவும் இருக்கலாம்.மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள், போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களும் ஆணுறுப்பை வெளிக்காட்டும் பிரச்னையால் பாதிக்கப்படலாம். செக்ஸ் பற்றிய பதற்றத்தினாலும் இதுபோல நடந்துகொள்ளலாம். தான் பாலுறவில் வலிமையாக இல்லையோ என்ற சந்தேகம் உள்ளவர்களும் இதுபோன்ற மனநோய்க்கு ஆளாகின்றனர்.பொது இடங்களில் ஆணுறுப்பைக் காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் பலவகையான செக் ஸுவல் தொந்தரவு கொடுப்பவர்கள் பிடிபடும்போது அவர்களுக்கு உளவியல் ரீதியாக மற்றும் உடல்ரீதியாகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு வெறுமனே சிறை தண்டனை மட்டும் கொடுத்து வெளியில் அனுப்பும்போது, அவர்கள் வெளியில் வந்த பின்னரும் பழைய குற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குற்றங்களில் போலீசிடம் சிக்கிக் கொள்பவர்களுக்கு பாலியல் ரீதியான வக்கிர எண்ணங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் குணமாக்கப்பட்டே வெளியில் அனுப்பப்படுகின்றனர்.வரும் முன் காப்பதுதான் மிகவும் சிறந்தது. ஆண்களுக்கு ஏற்படும் இத்தகைய பிரச்னைகளை ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்துவதன்மூலம் பெண்கள் மீது பலவிதமாக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியும்.சிறு வயதிலேயே Sexual abnormal behaviour காணப்பட்டால் திட்டுவதும் அடிப்பதும் எந்தப் பலனையும் தராது. அவர்களுக்கு மனநல சிகிச்சைகள் அளித்து குணமாக்க வேண்டும். இத்தகைய பிரச்னை இருப்பதாக உணர்கிற ஆண்கள் உடனடியாக மன நல மருத்துவரை அணுக வேண்டியதும் அவசியம் ’’ என்கிறார் மனநல மருத்துவர் ஞானமணிகண்டன்.– யாழ் ஸ்ரீதேவி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi