Tuesday, June 6, 2023
Home » ஆண்களும் கோலம் போடலாம்!

ஆண்களும் கோலம் போடலாம்!

by kannappan

நன்றி குங்குமம் தோழி சென்ற நூற்றாண்டு வரை வீதிகள் முழுக்க ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும் கோலங்களால் நிறைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும், அரிசி மாவால் இடப்பட்ட கோலங்களை அலுவலகம் விட்டும், பள்ளி முடிந்தும் மக்கள் ரசித்தபடி வீடு வந்து சேர்வார்கள். ஒரு வீட்டின் முன் கோலம் இல்லை என்றால், அவர்கள் எங்கோ வெளியில் சென்றுள்ளனர் அல்லது ஏதோ கெட்ட செய்தி என்று சுற்றத்தினர் புரிந்து கொள்ளும் அளவு, கோலங்கள் முக்கியமான தொடர்பு சாதனமாக இருந்து வந்தது. காலப்போக்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து, இடப்பற்றாக்குறை, நேரமின்மை என்று பல காரணங்களால் கோலம் போடும் கலாச்சாரமே நகரங்களில் காணாமல் போய்விட்டது. மக்களும் பண்டிகை காலங்களுக்கு மட்டும் கோலம் போட்டால் போதும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இளைய சமுதாயத்தினர் மீண்டும் தங்கள் பாரம்பரியத்தை திரும்பி பார்த்து, அவற்றை ஆராய ஆரம்பித்திருக்கின்றனர். உணவு மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை பார்த்து, பல மேற்கத்திய நடைமுறைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதால் ஏற்படும் சிக்கல்களை அனுபவித்த பின்னர், காலம்காலமாக கடைப்பிடிக்கும் வழக்கங்களை கற்றுக்கொள்ள இளைஞர்கள் தொடங்கிவிட்டனர்.அதனால்தான் இப்போது பார்கவி மணி, வாரம் மூன்று முறை யூடியூபில் நடத்தும் கோலம் போடு நிகழ்ச்சியை ஆண், பெண், இளைய சமுதாயத்தினர் என அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்க துவங்கி உள்ளனர். ஆன்மீகத்திலிருந்து கொஞ்சம் விலகி, அனிமேஷன், அறிவியல் என பார்கவியின் சுவாரஸ்யமான மார்கழி ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ‘கோலம் போடு’ பக்கத்தில் இணைந்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த பார்கவி மணிக்கு கலை மீது காதல். கட்டிடக்கலை வடிவமைப்பு, நிழற்படம், ஓவியம், எழுத்து, தொழில்முனைவு என பன்முகத்தன்மையுடன் கலையை முதன்மையாக வைத்து அதைச் சுற்றியே 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். ’எட்ஜ் டிசைன் ஹவுஸ்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி வருகிறார். கணித வடிவியலைவிட சிக்கலாக இருக்கும் சிக்கு கோலங்களை எளிமையாகத் தெளிவுபடுத்துகிறார்.‘‘நான் ஒரு வர்க்கஹாலிக். வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் எனக்கு வித்தியாசம் இருக்காது. வீட்டுக்கு வந்ததும், என் அறைக்குள் சென்று விடுவேன். லேப்டாப், சில புத்தகங்கள், சில சமயம் ஓவியம் என என் உலகை ஒரு அறைக்குள்ளேயே அடக்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் திடீரென எதிலும் ஆர்வமில்லாமல் இந்த நவநாகரீக வாழ்க்கை சலிப்புத்தட்ட ஆரம்பித்தது. என் அம்மாவிடம் உட்கார்ந்து புலம்பிய போதுதான், நான் வேலையில் தீவிரமாகவிருந்த நேரத்தில் என்னுடைய சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பழக்கவழக்கங்களையும் இழந்ததை நினைவூட்டினார். என்னுடைய பள்ளி நாட்களில், அப்பா காலை மார்னிங் வாக் செல்வது வழக்கம். அதற்குள் வீட்டில் விளக்கேற்றி கோலம் போட வேண்டும். அந்த பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. இதற்காக அதிகாலையே எழுந்து தயாராகி, கோலம் வரைந்து, நானும் அப்பாவுடன் காலை நடைக்கு செல்வது வழக்கமாகவிருந்தது.வளர்ந்த பின், படிப்பு, வேலை என பிஸியாகி இந்த வழக்கமெல்லாம் மாறிப்போனது. இதை ஏன் மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று அம்மா கேட்டார். இந்த முறை யூடியூப், கூகுள் என்று தொழில்நுட்பமும் கைகொடுக்க, தினமும் புது வடிவமைப்புகளை இணையத்தில் தேடி, நானும் அம்மாவும் இதை எங்களுடைய சின்ன பொழுதுபோக்காக்கி கொண்டோம். தினமும் என்னுடைய வீட்டு வாசலில் கோலம் வரைய ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டினர் அதை கவனிக்க ஆரம்பித்தனர். அது குறித்து பேச ஆரம்பித்தனர். பின் வரைந்த கோலத்தை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். அதற்கும் பல பாராட்டுக்கள். தினமும் பலர் கமென்ட் அளித்தனர். அனைவரும் பார்க்கட்டுமே என்று, ‘கோலம் போடு’ என்று பெயர் சூட்டி ஒரு பக்கமும் ஆரம்பித்தேன். ஒரே வருடத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது’’ என்றவர் அதற்காக தனி குழு அமைத்து செயல்பட துவங்கினார். ‘‘கோலங்கள் பலதரப்பட்ட மக்களின் பாரம்பரிய அடையாளமாக இருப்பதால், தவறான தகவல்களை கொண்டு சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தோம். இதற்காக நானும் என் குழுவும் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்தோம். மேலும் இதை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், இதில் எனக்கு கிடைத்த மனநிம்மதியையும் அழகியலையும் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்ல முழு நிகழ்ச்சியாக மாற்ற முடிவு செய்தோம். இந்த கோலமும் ஒரு புதிர் விளையாட்டு போலத்தான். சிக்கு கோலத்தில் வெறும் புள்ளிகளும் வளைவுகளும் கொண்டு சேர்க்க வேண்டும். முடிச்சுகள் அவிழ்த்துச் சிக்கல்களை தீர்ப்பது போலத்தான் இதுவும். மற்ற வடக்கிந்திய ரங்கோலி கோலங்களை போல கிடையாது. கலைநயம், கவனம், அறிவுத்திறன் எல்லாமே வேண்டும்” என்கிறார். மேலும் எட்ஜ் டிசைன் ஹவுஸ் குழு நடத்திய ஆய்விலிருந்து, மக்கள் தினமும் கோலம் போடத் தயங்கும் காரணங்களாக மூன்றை கண்டுபிடித்துள்ளனர். அவை, நேரமின்மை, இடப்பற்றாக்குறை மற்றும் கோலங்கள் வடிவமைக்க தெரியாதிருப்பது. இதற்காக மூன்று அழகான தீர்வுகளை பார்கவியும் குழுவினரும் கண்டுபிடித்தனர். திங்கள் கிழமைகளில் இரண்டு நிமிடத்திற்குள் வரையக்கூடிய கோலங்களை வரைந்து வீடியோ வெளியிடத் தொடங்கினர். இது நேரமில்லாதவர்களுக்கு உதவியாய் இருக்கும். அடுத்து, புதன் கிழமைகளில் 2×2 கோலங்கள். அதாவது இரண்டடி சதுர அடிக்குள் வரையும் கோலங்கள். கடைசியாக வெள்ளிக்கிழமைகளில் படிக்கோலங்கள் என்றும் மூன்று நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு வெளியிடுகின்றனர். இதனால் புதிய வடிவங்களும் கற்கலாம். இப்படி சமூக வலைத்தளத்தில் பதிவிடும் காணொளியைக் கூட திறம்பட, மக்கள் ரசிக்கும் வண்ணம் பதிவேற்றி வருகின்றனர். ‘‘இதை இருபதிலிருந்து முப்பது வயதிற்குள் இருக்கும் பெண்கள்தான் அதிகம் பார்க்கின்றனர். மேலும் சில ஆண்களும் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கின்றனர் என்ற செய்தி மேலும் வியப்பூட்டியது. அவர்கள் பேப்பர்களிலும், புத்தகங்களிலும் வரைந்து அதைப் பதிவிடுகின்றனர். கோலம் போடுவதை தாழ்மையாகப் பார்க்கும் இத்தலைமுறையினர், இப்போது இதை உளவியல் ரீதிக்காகவும், இதில் இருக்கும் அழகியலைக் கலைநயத்தை ரசித்தும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்’’ என்கிறார் பார்கவி மணி. தொகுப்பு: ஸ்வேதா கண்ணன் படங்கள்: ஜி.சிவக்குமார்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi