திண்டிவனம், ஜூலை 4: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதி 2 பெண்கள் உயிரிழந்தனர். திண்டிவனம் அடுத்துள்ள பெலாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் பிரித்திவிராஜ் (37). இவரது மனைவி சதா(21), அவரது உறவினர் அப்புனுராஜ் மனைவி பானு(40), மாதவன் என்பவரது மகன் மகேஷ் குமார் (25). இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த சந்தைமேடு அருகே சென்றபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் ஆட்டோ மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சதா மற்றும் பானு ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த பிரித்திவிராஜ், மகேஷ்குமார் (25) ஆகியோர் முண்டியம்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரோசணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பெண்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.