சிவகாசி, ஜூலை 7: சிவகாசி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் திருப்பதி(60). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது இவரது மனைவி கல்யாணி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டில் உள்ள ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு வந்துள்ளார்.
மறு நாள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கல்யாணி பீரோ திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சரி பார்த்த போது 2 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.