செங்கல்பட்டு, ஜூன் 11: செங்கல்பட்டு அருகே கோயிலில் பலி கொடுக்கப்பட்ட ஆட்டு ேதாலை குறைந்த விலைக்கு கேட்ட தகராறில், 5 பேரை சரமாரி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே மணப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கன்னிக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (35) என்பவர், பலி கொடுக்கும் ஆடுகளை வெட்டும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பஞ்சம். இவர், நேற்று முன்தினம் பிரகாஷிடம் ஆட்டிறைச்சி வாங்கியுள்ளார்.
கோயிலில் பலி கொடுக்கும் ஆடுகளின் தோல்களை உரிக்கும் தொழில் செய்து வருபவர் செங்கல்பட்டு கே.கே.தெருவை சேர்ந்த சேஷாத்ரியின் மகன் சுரேஷ்குமார் (எ) டொக்கு சுரேஷ் (31). இந்நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷை சந்தித்த சுரேஷ், ஆட்டு தோலை தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். விலையை குறைத்து கேட்டதால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த டொக்கு சுரேஷ், பிரகாஷை சரமாரி தாக்கியதோடு தன்னிடம் இருந்த கத்தியால் அவரது உடலில் கிழித்துள்ளார்.இதையறிந்து அங்கு வந்த பிரகாஷின் உறவினர்களான கருணாகரன் (52), செந்தில் (47), செல்வராஜ் (55) மற்றும் மரகதம் ஆகியோர், எதற்காக பிரகாஷை கத்தியால் கிழித்தாய் என கேட்டுள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதால் டொக்கு சுரேஷை சரமாரி தாக்கியுள்ளனர்.
பதிலுக்கு சுரேசும் கத்தியால் மரகதம், செல்வராஜ், செந்தில், கருணாகரன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். மேலும் அவர்களின் ஆட்டோ கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளார். இதில் காயமடைந்த 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செல்வராஜ், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார் (எ) டொக்கு சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னிக்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.