கே.வி.குப்பம், அக்.17: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. கடந்த மாதங்களில் திருவிழாக்கள் நடந்ததால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடந்தது. ஆனால், கடந்த புரட்டாசி மாதம் 4 வாரமும் நடந்த ஆட்டுச்சந்தைகளில் விற்பனையின்றி வெறிச்சோடியே காணப்பட்டது. இதற்கிடையில், திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. இதில், கே.வி.குப்பம் மற்றும் சுற்றப்புற கிராமகள், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால், ஆட்டின் விலை ₹7 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரையே போனதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், நேற்று நடந்த சந்தையில் அதிகளவில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கசையாடுகளே விற்பனைக்கு வந்தன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சென்ற வார விற்பனையை விட இந்த வாரம் விற்பனை சற்று கூடுதலாக நடந்ததே தவிர, மொத்தமாக வியாபாரம் மந்தமாகவே இருந்தது. புரட்டாசி மாதம் முடியும் நிலையில் இருப்பதாலும், வரும் வாரங்களில் ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகைகள் நெருங்குவதாலும் இதே நிலைமை நீடிக்காது. அடுத்தடுத்த வாரங்களில் விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.