மயிலாடுதுறை, ஏப்.18: மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பேரணியில் துவங்கி மாம்பழமா மாம்பழம் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கைகளை ஓங்கி இறுதி கட்ட பிரச்சாரத்தை, மைக்கை அணைத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் நிறைவு செய்தனர்.
மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கடந்த மாதம் துவங்கியது. கிட்டத்தட்ட ஒரு வார காலமாக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுக, பாமக, நாதக மற்றும் கூட்டணி கட்சியினர், சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மயிலாடுதுறை நகரப் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் பல்வேறு கட்சியினர் மட்டும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நாள் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விஜயா திரையரங்கம் பகுதியில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவிற்கு கைச் சின்னத்தில் ஆதரவு கேட்டு பிரசாரத்தை நிறைவு செய்தனர். பின்னர் லாகனம் பகுதியிலிருந்து ஊர்வலமாக வருகை தந்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கால் டாக்ஸி பகுதியில் மாம்பழமாம் மாம்பழம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். கடந்த ஒரு மாத காலமாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த மைக்குகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.