கடலூர், அக். 17: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் ஏராளமான பொதுமக்கள் வந்து மனு அளித்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கின் வெளியே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் தான் கொண்டு வந்திருந்த பையில் பெட்ரோல் பாட்டில் ஒன்றை வைத்திருந்தார். இதை பார்த்த போலீசார் பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பண்ருட்டி அருகே, விசூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த துரைக்கண்ணு மகன் வீரப்பன்(55) என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு எனது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவினால், கூரை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் தொகுப்பு வீடு கேட்டு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். முறையாக மனு அளிக்க வேண்டும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் அவர் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.