நாமக்கல், ஆக.7:சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராசிபுரம் தாலுகா, சீராப்பள்ளி கிராமத்தை சார்ந்த 30 பேர், சரக்கு ஆட்டோவில், அய்யனாரப்பன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் போது, ராசிபுரம்-ஆத்தூர் மெயின் ரோட்டில், பாதைக்காடு என்ற இடத்தில், விபத்தில் சிக்கி காயமடைந்தனர். வாகனத்தின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ, சீராப்பள்ளியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கு சொந்தமானதாகும். அவரது தந்தை தர்மலிங்கம் (52), அந்த ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். இதற்கு பர்மிட் இல்லை. இந்த விபத்து குறித்து, நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்ற டிரைவர் தர்மலிங்கம் காயமடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது டிரைவிங் லைசென்ஸ், 3 மாதம் தற்காலிக ரத்து செய்யப்படும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காகவும், இன்சூரன்ஸ் பிரிமியம் புதுப்பிக்காமல் இயக்கியதற்காகவும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு உத்தரவின்படி ₹15,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் பறிமுதல் செய்வதுடன், டிரைவிங் லைசென்ஸ் 3 முதல் 6 மாதம் வரை தடை செய்யப்படும் என கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.