ஈரோடு,ஜூலை19: வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. ஈரோடு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சென்னிமலை சாமுவேல் தலைமை தாங்கினார்.
இப்பயிற்சியில், வேளாண் இடுபொருட்களின் மானிய விபரங்கள், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கமளித்தனர். தமிழ்நாடு கால்நடைத்துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் டாக்டர் யசோதை கலந்து கொண்டு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பதில் ஊட்டச்சத்து பயன்பாடு,நோய்கள் வருமுன்பு காத்தல், கடன் வசதிகள் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறினார். பயிற்சியின் போது, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா அட்மா திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார். பயிற்சியில் கூரபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.