சேந்தமங்கலம், செப்.5: எருமப்பட்டி பவித்திரம் சந்தையில், வெயிலின் தாக்கத்தால் ஆடுகள் வரத்து குறைந்து, ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரத்தில் திங்கள்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம் பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை, உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதியான நவலடிப்பட்டி, வரகூர், செவிந்திப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக எருமப்பட்டி வட்டாரத்தில் மழை பெய்து உள்ளதால், எருமப்பட்டி சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து 250க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தது. அவை ₹16 லட்சத்திற்கு விற்பனையானது. இதேபோல சுற்றுப்பகுதியில் இருந்து 250க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. அவை ₹1 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.