ஆரணி, நவ.4: ஆரணியில் பட்டப்பகலில் ஆட்டோவில் ஆடுகளை திருடிச்சென்ற கணவன், மனைவியை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி டவுன் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரகு(38), ராணி(50). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் அதேபகுதியில் ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் இவர்கள் இவரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை ஆரணி- சேத்துப்பட்டு செல்லும் சாலை ஓரத்தில் விட்டு மேய்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென ஒரு ஆட்டோ வேகமாக வந்து சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளின் அருகே நிறுத்தியுள்ளனர். பின்னர், ஆட்டோவில் இருந்து ஒரு பெண்ணும், ஆணும் இறங்கியுள்ளனர். சிறிது நேரம் சாலையை கடந்து செல்லும் நபர்களை நோட்டமிட்டனர். தொடர்ந்து, சாலையில் யாரும் செல்லாதபோது, சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளை பிடிப்பதற்காக அந்த பெண் கையில் வைத்திருந்த தழையை காட்டி ஆடுகளை அவர் பக்கத்தில் வர வழைத்துள்ளார்.
அப்போது, அவர்கள் அருகில் வந்த 2 ஆடுகளை ஆட்டோவின் பின்புறம் உள்ள டோரை திறந்து ஆடுகளை ஏற்றி மறைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டபடி ஆட்டோவை வேகமாக தூரத்தினர். சத்தம்கேட்டு கூலி தொழிலாளர்களான ரகு, ராணி ஆகியோரும் பொதுமக்களுடன் சேர்ந்து துரத்தி சென்று ஆட்டோவை மடக்கி அந்த 2 நபர்களையும் பிடித்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலூர் மாவட்டம் அல்லாபுரம் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த சபரி(35), அவரது மனைவி நிஷா(31), என்பதும், இவர்கள் ஆட்டோவில் ஆடுகளை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றதும் தெரியவந்தது. உடனே, போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 2 ஆடுகளையும் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து, ஆட்டின் உரிமையாளர்கள் ரகு, ராணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கணவன்- மனைவியான சபரி, நிஷா ஆகிய இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அதேபகுதியில் கடந்த 2 வாரங்களில் 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டுபோனது குறிப்பிடத்தக்கது.