பள்ளிகொண்டா, ஆக.4: பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடிப்பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 7வது நாளான வருகின்ற 9ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. பள்ளிகொண்டா அருகே பிரசித்தி பெற்ற வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி ஆடி முதல் வெள்ளி திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 3ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் ஆடி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக காலை 10 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடி மரத்திற்கு கலச தீர்த்தங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து அம்மன் உருவம் பொறித்த 34 அடி உயரமுள்ள கொடி சீலைக்கு தூப தீப ஆராதனைகள் பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றத்திற்கு முன்னதாக திருத்தேர் உற்சவத்திற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடரந்து நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட எல்லையம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி உற்சவ கால மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கைகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில் காலையில் கேடய உற்சவத்தில் அம்மன் திருவீதி உலாவும், மாலையில் யாக சாலை பூஜைகளும், இரவில் சிம்ம வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆடி பிரமோற்சவத்தின் 7ம் நாளான வரும் 9ம் தேதி 4வது வெள்ளியன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனை தொடரந்து 5ம் வெள்ளி தெப்போற்சவமும், 6ம் வெள்ளி இலட்ச தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி(கூ.பொ), இணை ஆணையர் ஜீவானந்தம்(கூ.பொ), கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன்(கூ.பொ), ஆய்வர் சுரேஷ்குமார், கணக்காளர் பாபு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.