சின்னமனூர், ஆக. 4: கேரளா பகுதி தென்மேற்கு மற்றும் தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொழிய துவங்கினால், அதன் தாக்கம் தேனி மாவட்டத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் ஆடி,ஆவணி மாதத்தில் மழை பெய்யும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயம் செய்வதற்கு துவக்கம் மற்றும் முதல் பட்டமான ஆடி பட்டத்தில் வரக்கூடிய ஆடி பெருக்கில் உழவார பணிகளை துவங்குவது வழக்கம். இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சிறு தூரல் மழை கூட பெய்யவில்லை. இருந்த போதிலும் ஆடிபட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.இதனால் சின்னமனூர் மற்றும் போடி சுற்றுவட்டாரத்தில் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக கடலை, துவரை, உளுந்து, கேழ்வரகு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் ஆகிய பயிர்களை அதிகளவில் பயிரிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆடி பெருக்கு என்பதால் ஒரு சில இடங்களில் சாமி கும்பிட்டு, உழவு பணிகளை துவங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘விவசாயம் செய்வதற்கு உகந்ததாக ஆடி மாதம் முதல் மார்கழி வரை பட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பட்டமான ஆடி மாதத்தில் தரிசான வயல்காடுகளில் சீமை கருவேல மரச்செடி உள்ளிட்ட தேவையற்றவையை அகற்றுதல், பயன்பாட்டில் உள்ள வயல்காட்டில் பழைய காய்ந்த செடி, கொடிகள், அறுவடைக்கு பிறகு எஞ்சியுள்ள பயிர்கட்டைகள் போன்றவற்றை சீரமைப்பு செய்தோம். தற்போது மழை இல்லாவிட்டாலும் கூட, ஆடி பெருக்கை முன்னிட்டு உழவு ஏர் மாடுகள், டிராக்டரை கொண்டு உழவார பணியை துவங்கியுள்ளோம்’’ என்றனர்.