Tuesday, June 6, 2023
Home » ஆடம்பரத்தைத் தவிர்ப்பீர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

ஆடம்பரத்தைத் தவிர்ப்பீர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

by kannappan

சென்னை: ஆடம்பரத்தைத் தவிர்க்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; ‘இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.  அதேவேளையில் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக என்னை வரவேற்று ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்ற நடைமுறை தொடர்கிறது. இவற்றைத் தவிர்க்கும்படி பல முறை கேட்டுக்கொண்டபிறகும், இவை தொடர்வது வருத்தமளிக்கிறது.கழகத் தலைவரின் அறிவுரைப்படி, ‘புத்தகங்களை வழங்குங்கள்’ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி நீங்கள் எனக்கு அளிக்கும் புத்தகங்களைத் தேவைப்படும் பள்ளி-கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம்.தலைவர் அவர்களின் 70-வது பிறந்தநாளையொட்டி என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் ‘கலைஞர் நூலக’த்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை.மேலும், ‘ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும்வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள்’ என்று நான் கேட்டுக்கொண்டபடி நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல இல்லங்களுக்கு அளித்து மகிழ்ந்தேன்.அதேபோல், பலரும் என்னிடம் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்கள். தொகையில் பாரபட்சம் பார்க்காமல்  அவற்றை என் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். அந்த நிதியிலிருந்து மருத்துவம், கல்வி போன்ற உதவிகளைத் தேவையுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி வருகிறோம்.அப்படிக் கடந்த ஒரு மாதத்தில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.13.75 லட்சத்தை வழங்கியுள்ளோம். இந்தப் பணியைத் தமிழ்நாடு முழுவதும் தொடரவுள்ளோம். ஆகவே நீங்கள் என் மீது காட்ட நினைக்கும் அன்பை, இளைஞர் அணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நீங்கள் வழங்கும் ஒரு சிறுதொகை எங்கோ ஒரு மூலையில் உதவியை எதிர்நோக்கி இருக்கும் எளியோருக்கான வாழ்வாக அமையும், வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவச் செல்வங்களின் கல்வி காக்க உதவலாம்.நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு புத்தகம் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள  குழந்தைக்கு அறிவின் திறவுகோலாக இருக்கலாம்.  மகளிர் சுயஉதவிக் குழுத் தயாரிப்புகளை, தயாரிப்பவர்-பயன்படுத்துவோர் என இருதரப்புக்கும் பலனளிக்கும்.எனவே, கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள், பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில் புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi