நெல்லிக்குப்பம், ஆக. 5: ஆஞ்சநேயர் கோயில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் கடலூர் – பண்ருட்டி மெயின் சாலையில் பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடலூரில் இருந்து இவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இக்கோயிலுக்கு சென்று விட்டு தங்களது பணிக்கு செல்வது வழக்கம். இக்கோயிலில் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் செய்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.
இதையடுத்து நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோயில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கொடுத்த தகவலின் பேரில், பார்த்தசாரதி பட்டாச்சாரியார், கோயில் முக்கியஸ்தர்கள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது, கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சுவாமியின் திருவாச்சி, கிரீடம், ஜடாரி, உண்டியலில் இருந்த பணம் போன்றவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.