நன்றி குங்குமம் ஆன்மீகம்ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 30 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)ஆசை மனதை அலைக்கழிக்கிறது, மனம் ஐம்புலன்களை அலைக்கழிக்கிறது. ‘இது வேண்டும், அது வேண்டும்,’ என்ற மனோநிலையை ‘விருப்பம் கொள்ளுதல்’ என்று சொல்லலாம். ஆனால் ‘இன்னமும் வேண்டும், அதுவும், அதற்கடுத்ததுவும் வேண்டும்’ என்ற மனோநிலை ஏற்படுமானால் அதுதான் ஆசை! விருப்பம் நிறைவேறாவிட்டால், அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. இது இல்லாவிட்டால் இன்னொன்று என்று மனது சமாதானப்பட்டுவிடும். ஆனால், எதிலாவது ஆசைகொள்ளும்போது, அதுவேதான் வேண்டும் என்ற வேட்கை கொள்ளும்போது, அது நிறைவேறாமல் போகுமானால் அந்த ஆசை கோபமாக, பகையாக, விரோதமாக, பழிவாங்கும் குரோதமாக, பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்கவிடாத வெறியாகமாறிவிடுகிறது. விருப்பப்படும் அல்லது ஆசைப்படும் பொருளை அடைய நமக்குத் தகுதி இருக்கிறதா என்று நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. நம் தகுதியை நாம் மனசாட்சிக்கு முன்னால் நிலைநிறுத்திப் பார்ப்போமேயானால், பல சமயங்களில் அவ்வாறு விருப்பப்பட்டதற்காகவும், ஆசைப்பட்டதற்காகவும் நாமே வெட்கப்படுவோம்!நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மணசரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண (3:8)‘‘அர்ஜுனா, உனக்கான தினசரிப் பணிகளை நீ மேற்கொள்ளத்தான் வேண்டும். செயலற்று, சோம்பலாய் அமர்ந்திருக்காதே. அவ்வாறு செயலற்று நீ கிடந்தாயானால் உன் உடலை உன்னால் பேண இயலாதுபோகும்.’’ அன்றாடம் உணவு, நீர் என்று அருந்துவது உடலைப் பேணுவதற்காகத்தானே? நிற்பது, நடப்பது, ஓடுவது ஆகிய பணிகளும் உடல் உறுதிக்கான பயிற்சிகள்தானே? உடலின் இயக்கத்தை இந்தப் பழக்கங்கள்தானே உறுதிசெய்கின்றன? இயல்பான தினசரிப் பணிகளை நாம் முறையாக அனுசரித்தாலே நம் உடலை நம்மால் பேண இயலும். இந்த இயல்பான நடவடிக்கைகளினூடேதான் நாம் உணர்வுகளுக்கும் ஆட்படுகிறோம். அதே சமயம், உடலைப் பேணுவதாகிய இந்தப் பொறுப்பில் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், நம் புலன்கள் நம் உடலோடு ஒன்றியிருப்பவை. அவற்றை நம் உணர்வுகளால் நாம் அலைக் கழித்தோமானால், அவை கெடுவதோடு, அதன் தொடர் விளைவாக, நம் ஒட்டுமொத்த உடல் நலனும் பாழ்பட்டுப் போகிறது. ஓஷோ சொல்வதுபோல, மனதை அடையும் ஓர் ஆசை, அது சம்பந்தப்பட்ட நம் புலனைத் தூண்டிவிடும்போதுதான் நமக்கே அந்த ஆசையின் பரிமாணம் புரிகிறது. அது நிறைவேறக்கூடிய நியாயமான ஆசையாக இருக்குமானால் அந்தப் புலன் தூண்டப்படுவதில் அர்த்தமிருக்கும். ஆனால் நிறைவேற முடியாத ஆசை, புலனை நிர்ப்பந்தப்படுத்துமானால் அது ஏற்றுக்கொள்ள இயலாததாகிறது, அதனால் அந்தப் புலனைக் கொண்டிருக்கும் உடலும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக மது அருந்தும் ஆசை நாவையும், வாயையும் ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு காரணமாக மது அருந்தும்போது அதன் சுவை, அதனால் ஏற்படும் சுகமான மயக்கம் எல்லாம் அந்த சமயத்தில் உடலை முழுமையாக அடிமைப்படுத்திவிடுகின்றன. இந்த நேரத்தில் உடல் மேற்கொள்ளவேண்டிய, உள் உறுப்புகளின் இயல்பான பணிகள் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. அப்படி நிறுத்தப்படுவதால் துன்பமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. சராசரியான தினசரி செயல்களைக்கூட நிறைவேற்ற முடியாத சோகம் அரங்கேறுகிறது. சாதாரணமாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறோமென்றால், அதற்கு நமக்கு ஒரு வாகனம் தேவைப்படுகிறது. அந்த வாகனம் பழுதில்லாததாக, நாம் பயணிக்கும் இடத்தை நோக்கி எந்தத் தடையுமில்லாதவகையில் நம்மைக் கொண்டு சேர்க்க வேண்டும். போதுமான அளவு எரிபொருள் கொண்டதாக, இயக்கப்படுவதற்கான கருவிகள் நன்கு பராமரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். உடன் பயணிப்பவர்கள் நமக்கு அனுசரணையாக, அல்லது நாம் அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளவேண்டும். முக்கியமாக, பயணக் கட்டணத்துக்கான பணம் நம்மிடம் போதுமான அளவு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் பயணத்தை எந்த இடையூறுமில்லாமல் நம்மால் பூர்த்திசெய்ய இயலும்.அதேபோல, வாழ்க்கைப் பயணத்தை நாம் உடலென்ற வாகனத்தில் மேற்கொள்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல் பொறுப்பு நமக்கு இருக்கிறது. தவழும் ஒரு குழந்தை, குறிப்பிட்ட வயதுவரைதான் தவழவேண்டும். எழுந்து நிற்கக்கூடிய கட்டம் வந்தபிறகும் தவழ்ந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நடப்பது, தன் உணவைத் தானே உண்பது என்ற அந்தந்த காலகட்டத்தில் அததற்கான செயல்களில் அந்தக் குழந்தை அடுத்தடுத்து ஈடுபடவேண்டும். இப்படி ஈடுபடும்போது, வெறும் உடல் வளர்ச்சிக்கான முயற்சிகளில் மட்டுமே அக்கறை கொள்வதைவிட, ஆன்மநலனை உத்தேசித்தும் சில நற்செயல்களை மேற்கொள்ளலாம். அவற்றில் முக்கியமானதுதான் புலன்களை ஆசைகளுக்கு உட்படுத்தாமல் இருப்பது. உடல் ஒருவனுடைய உயிரைப் பாதுகாப்பது; அதேபோல புலன்களுக்கு அடிமையாகாமல் இருப்பது ஆன்மாவுக்குப் பாதுகாப்பு.தெரிந்தவர் வீட்டுக்குப் போகிறோம். ஏற்கெனவே நம் வீட்டில் சாப்பிட்டாகிவிட்டது. தெரிந்தவர் நம்மை வரவேற்று உபசரிக்கிறார். உண்பதற்காக ஏதேனும் கொண்டுவருகிறார். உடனே நாம் அவரிடம், ‘இல்லை, வேண்டாம், நான் இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்தேன்,’ என்று மறுக்கிறோம். இந்த மறுப்பை நாம் தெரிந்தவரிடம் மட்டுமல்லாமல், நம் மனதுக்கும் சொல்லவேண்டும். அப்போதுதான் கொண்டுவந்து வைக்கப்படும் உணவுப்பொருளைக் கண்கள் திறந்திருந்தாலும் பார்க்காது. நாசி திறந்திருந்தாலும் நுகராது. நாக்கு ருசிக்கத் தயாராகாது. இப்படி புறத்தில் மட்டுமன்றி அகத்திலும் மறுப்புச் சொல்வதில்தான் புலன் அடக்கப்படுவதில் வெற்றி காணமுடியும். பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஒரு ஏழைச் சிறுமி பால்பாயின்ட் பேனாக்கள் விற்றுக் கொண்டிருந்தாள். பேருந்துக்காகக் காத்திருந்த ஒருவரிடம் தன்னிடமிருந்த பேனாவை விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு கெஞ்சினாள். அவருக்கோ அப்போதைக்கு அந்தப் பேனா அவசியமில்லை. ஆகவே மறுக்கிறார். ‘எனக்கு வேண்டாம் அம்மா’.‘அப்படியானால் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?’ என்று பரிதாபமாகக் கேட்டாள் அந்தச் சிறுமி. ‘ இப்படி யாருமே பேனா வாங்கவில்லை என்றால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சாப்பாட்டுக்குக் காசே இருக்காதே’ என்று வாய்விட்டே சொன்னாள். அவருக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. உடனே தன்னிடமிருந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை அந்தச் சிறுமியிடம் நீட்டினார். ‘எடுத்துக்கொள் அம்மா. என்னால் இவ்வளவுதான் உன் பசியைத் தீர்க்க முடியும்,’ என்றார்.அவற்றை வாங்கிக்கொண்ட சிறுமி, ஒரு பாக்கெட்டை அவரிடமே திருப்பிக் கொடுத்தாள். ‘இந்த ஒரு பாக்கெட் போதும் ஐயா. இதைப் பிரித்து நாங்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்கிறோம்,’ என்றாள். அவர் அப்படியே நெக்குருகிப் போய்விட்டார். ‘போதுமாம்மா, ஒரு பாக்கெட் போதுமா?’ என்று கேட்டார். அவரைப் பார்த்த அந்த சிறுமி, ‘இரண்டையும் எனக்குக் கொடுத்துவிட்டால், நீங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள்?’ என்று பரம வெகுளித்தனமாகக் கேட்டாள்! இதைத்தான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்கிறார். ‘நம்மை அடிமை கொள்ள நினைக்கும் புலன்களை நாம் போரிட்டு அடக்க வேண்டும். அவற்றை நாம் அடிமைகொண்டு, ஆன்மாவுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும். அதுபோல இந்தப் போரிலும், உன் இந்திரியங்கள் உணர்வால் ஆட்படாமல் இருக்க அவை மீதான உன் முதல் போரைத் தொடு. உடனே எதிரே இருக்கும் எதிரிச் சேனைகள் மீது போர்த்தொடுக்கும் மனத்தெம்பு கைகூடும்.’ இப்போதைய அர்ஜுனனின் தலையாயப் பணி போரிடுவதுதான் என்பதை கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். யக்ஞார்த்தாத்கர்மணோன்யத்ர லோகோயம் கர்மபந்தனததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க ஸமாசர (3:9)‘‘யக்ஞ பூர்வமான காரியங்களைத் தொடர்ந்து இயற்ற வேண்டும், அர்ஜுனா. மற்ற கர்மங்களால் உலகம் கர்மபந்தத்தை அடைகிறது என்பதை அறிந்துகொள். ஆகவே எந்தப் பற்றுக்கும் அடிமையாகிவிடாமல் யக்ஞத்துக்கான கர்மங்களை இயற்றுவாயாக.’’யக்ஞபூர்வமான செயல்கள் இறைத்தன்மை உடையவை. அவை இறைவனுக்கே அர்ப்பணிக்கத் தக்கவை. மனிதனாகப் பிறந்து விட்டால் செயலாற்றுவது என்பதைத் தவிர்க்கவே முடியாது. தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, தன் சொந்த நலனுக்காக, தன் உடல் வளர்ச்சிக்காகச் செய்யும் செயல்கள் இயல்பானவை, தவிர்க்க முடியாதவை. அவ்வாறு செயல்படாமல் யாராலும் தப்பிக்கவும் முடியாது. ஆனால் யக்ஞகர்மா எனப்படும் செயல்கள் இறைவனுக்கு சமர்ப்பணமாகச் செய்யப்படுபவை. முக்கியமாக, உலகியல் வாழ்வின் கர்மத்தில் மூன்று நிலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று அவற்றை சுவாமி சித்பவானந்தர் விளக்குகிறார். மூன்று நிலைகளில் கீழ்நிலை உயிரினங்கள், பசிப்பதற்கும் புசிப்பதற்குமாகவே வாழ்கின்றன. தம்முடைய பசியைப் போக்கிக்கொள்ள அவை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்கின்றன. அதிகபட்சமாக பறித்தல் என்ற செயலால் தம் பசி என்ற வேட்கையினைத் தீர்த்துக்கொள்கின்றன. இந்த உயிர்களுக்கு, வாழ்க்கை என்பதே பெரிய போராட்டமாக அமைந்துவிடுகிறது. எதைத் தாக்கி எது வாழ்வது என்ற வலிமைக்கும், வலிமை குன்றியதற்குமான போராட்டம். எது வலிமை மிக்கதோ அது ஜெயிக்கிறது. வலிமை குன்றியதைத் தன் உணவாகவும் ஆக்கிக்கொள்கிறது! உயிர்களின் கர்மா இதுதான்.இரண்டாவதாக, பங்கிடுதல் என்ற பண்பை அல்லது செயலை இடைநிலை உயிரினங்கள் என்ற மனிதகுலம் மேற்கொள்கிறது. இந்த இனிய பண்பால் பறித்தல் என்ற குணம் அல்லது செயல் பெரும்பாலும் குறைகிறது. தன்னைப் போன்றதே இன்னொரு உயிரும் என்ற பெருந்தன்மை வளர்கிறது. பலம், பலவீனம் என்ற வேறுபாடு இங்கே இல்லை.எல்லோரும் சமம் என்ற பெருநோக்கு உண்டு. இதனாலேயே ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்கிறார்கள். இருப்பவரிட மிருந்து இல்லாதவர் பெறுகிறார். ஒருவருக்கொருவர் தம்மிடம் உள்ளதை, நல் உள்ளத்தோடு பகிர்ந்துகொள்கிறார்கள். இந்நிலை உயிர்கள், பங்கிடுதல் என்ற செயலைப் புரிகின்றன. பங்கிடுதலை விளக்க மிகவும் பிரபலமான ஒரு கதையை உங்களுக்கு நினைவூட்டலாகச் சொல்கிறேன்; சொர்க்கத்தில் வாழ்பவர்கள் மிகவும் சந்தோஷமாகவும், நரகத்தில் வாழ்பவர்கள் மிகவும் துன்பத்திலும் வாழ்வது ஏன்? இந்தக் கேள்வி நாரதருக்கு எழுந்தது. அவர் பரமேஸ்வரனிடம் கேட்டார்.‘சரி, வா. உனக்கு நேரிடையாகவே விளக்குகிறேன்,’ என்ற ஈஸ்வரன் அவரை நரகத்துக்கு அழைத்துச் சென்றார். கூடவே தான் கொண்டு வந்திருந்த அமுதக் கலசத்தை அவர்கள் முன் வைத்தார். ‘உங்களுக்கென்றே பிரத்யேகமாக நான் கொண்டு வந்திருக்கும் அற்புத உணவு இது. இதை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்,’ என்றார். உடனே அவர்கள் ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று ஒருவரை ஒருவர் பின்னுக்கிழுத்து, ஒவ்வொருவரும் தானே நிறைய அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் அமுதக் கலசத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். சட்டென்று அவர்களைத் தடுத்தார் கயிலைநாதன். ‘நீங்கள் இந்த அமுதத்தை உட்கொள்ள நான் அனுமதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் உங்கள் கையை மடக்காமல் உண்ண வேண்டும்,’ என்றார். நொந்து போனார்கள் நரகவாசிகள். கையை மடக்காமல் எப்படி சாப்பிடுவது? ‘நீங்களும் உங்கள் அமுதமும்… ஒன்றும் வேண்டாம், எடுத்துக் கொண்டு போங்கள்,’ என்று எரிச்சலுடன் கத்தினார்கள். ‘முயற்சி செய்துதான் பாருங்களேன்,’ என்று கூறிய மகாதேவன் அந்தக் குடத்தை அங்கேயே வைத்துவிட்டு நாரதரை அழைத்துக் கொண்டு சொர்க்கத்துக்குச் சென்றார். இப்போது இன்னொரு அமுதக் குடம் இவர் கையிலிருந்தது. சொர்க்கவாசிகளிடம் அந்தக் குடத்தைக் கொடுத்து அதே நிபந்தனையை விதித்தார். அவர்களும் பெரு மகிழ்ச்சியுடன் குடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நாரதருக்கு வியப்பு. அதெப்படி இவர்களால் மட்டும் கையை மடக்காமல் உண்ண முடியும்? ஒருசில விநாடிகளிலேயே அவருக்குப் புதிர் விலகியது. சொர்க்கவாசிகள் ஒருவர் அமுதத்தைக் கையால் அள்ளி, கை மடக்காமல் அடுத்தவருக்கு ஊட்ட, அவர் இவ்வாறே இன்னொருவருக்கு ஊட்ட, மொத்தத்தில் எல்லோருமே அந்த அமுதத்தை சம அளவில் திருப்தியுடன் உண்டு மகிழ்ந்தார்கள். நரகவாசிகள் இன்னமும் அது எப்படி கையை மடக்காமல் சாப்பிடுவது என்ற ஆராய்ச்சி யிலேயே ஏக்கத்துடன் அமுதக் கலசத்தைப் பார்த்தபடியே காத்திருந்தார்கள். நாரதர் புரிந்து கொண்டார். பகுத்துண்டு வாழ்ந்தால் பல்லுயிர்களையும் ஓம்ப (பேணுதல், காத்தல்) முடியும் என்பதையும் தெரிந்து கொண்டார். அதோடு நரகத்துக்கு வந்தவர்கள் தொடர்ந்து பாவிகளாகவும், சொர்க்கத்துக்கு வந்தவர்கள் தொடர்ந்து பெருந்தன்மையாளர்களாகவும் இருக்கும் உண்மையும் அவருக்குப் புரிந்தது. மூன்றாவது நிலை மிகவும் உயர்வானது, மேன்மையானது. படைத்தல் என்ற இந்த குணநலனானது, எந்த எதிர்பார்ப்புமில்லாமல், தனக்கென எதையும் பதுக்கிக் கொள்ளாமல், பிறர் நலனுக்காகவே செயல்படுவது. இந்நிலை மாந்தர்களுக்குச் செயலாற்றுவது மட்டுமே பிரதானம். அதன் பலாபலன்களைச் செயல்புரிபவர் எதிர்நோக்குவதில்லை. தனக்கென்று வாழாத பெருநோக்கே இத்தகையோரின் வாழ்வில் அடிநாதமாகிறது. இதுவே இறைவனுக்குச் சமர்ப்பணமான செயலாக அமைகிறது.(கீதை இசைக்கும்)தொகுப்பு: பிரபு சங்கர்…
ஆசையை நாம் எப்போது தெரிந்துகொள்கிறோம்?
previous post