கூடுவாஞ்சேரி, ஜூன் 3: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகையில் அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், போதிய ஆசிரியர்கள் மற்றும் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கண்டிகை அரசு உயர்நிலை பள்ளி தற்போது மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 2025-2026ம் கல்வி ஆண்டில் முதன்முறையாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், மாணவர் சேர்க்கைக்காக கண்டிகையை சுற்றியுள்ள வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
ஆனால், போதிய ஆசிரியர்கள் மற்றும் கட்டிட வசதி இல்லாததால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, வெயில் காலங்களில் மரத்தடியிலும், விழா மேடைகளிளும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பள்ளியில், ஆய்வகங்கள் இல்லாததால் கல்வி திறன் குறையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மேல்நிலை பள்ளியில் இன்னும் 18 ஆசிரியர்கள், 6 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் அமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.