சிவகங்கை, செப்.1: சிவகங்கை மாவட்டத்தில் 11 வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும்.
காலை உணவுத் திட்டத்தை 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் இந்திரா காந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.