சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளரும், மாநில தலைவருமான கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயராத உழைப்பினால், தளராத முயற்சியினால் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக, இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களின் முதன்மை முதல்வராய் சீரோடும் சிறப்போடும் திறம்பட பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதெல்லாம் சமூக நீதி மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் முதல்வரின் நடவடிக்கை பம்பரமாய் சுழல்கிறது. முதல்வராய் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தீட்டி அனுதினமும் அயராது உழைத்து வருகிறார். குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை அதற்கென தனி கவனம் செலுத்தி அரசு பள்ளி மாணவர் நலன் காத்து வருகிறார். ஆசிரியர், அரசு ஊழியர்களை பொருத்தவரை அவர்களுடைய பெரும்பான்மையான கோரிக்கைகள் எல்லாமே திமுக ஆட்சி காலத்திலேயே நிறைவேறி இருக்கிறது என்பது வரலாறு. ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கான புதிய அறிவிப்புகளை தனது பிறந்த நாள் தினத்தில் முதல் அறிவித்துள்ளார். இதில், அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். எங்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றிய தமிழ்நாடு முதல்வருக்கும், பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….