புதுச்சேரி, செப். 20: புதுச்சேரி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு கொக்கு பார்க் சிக்னல் அருகே காரில் வந்தபோது, சுப்பையா நகரை சேர்ந்த சதீஷ், மகேஷ் மற்றும் ஹிலால் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் வேல்முருகனின் கார் மீது இடித்தாக கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் அவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டதால் வேல்முருகனுக்கும், அந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வேல்முருகனை திட்டி, கீழே கிடந்த பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வேல்முருகன் ஓட்டி வந்த காரை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் வேல்முருகனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்முருகன் மனைவி சுனிராம் பிரிசில்லா, கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து, சதீஷ், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். ஹிலால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.