விருதுநகர், ஆக.14: விருதுநகரில் ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக அமைக்கும் திட்டத்தில், குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் குறைவான தொகையை தமிழக அரசு மானியமாக வழங்கும்.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதன் மூலம் வேலைவாயப்பு பெருகும், அன்னிய செலாவணி ஈட்ட முடியும். இது குறித்த விழிப்புணர்வு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஆக.20 நண்பகல் 12 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.