கோவை, ஆக.12: ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படாது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி ‘ட்ரை டே’வாக கடைபிடிப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள்,
அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், தமிழ்நாடு ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறி சுதந்திர தினத்தன்று மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.