வேலூர், செப்.5: வேலூர் சார்பனாமேட்டில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அங்கு நேற்று மதியம் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் சார்பனாமேட்டில் பில்டர்பெட் டேங்க் தொடங்கி சார்பனாமேடு முத்துமாரியம்மன் கோயில் சந்திப்பு வரை பில்டர்பெட் ரோடில் சாலையின் இருபுறமும் கடந்த 35 ஆண்டுகளாக காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இச்சந்தையில் கலாஸ்பாளையம், சார்பனாமேடு, அரசமரப்பேட்டையின் ஒரு பகுதி, பிடிசி ரோடை சேர்ந்த மக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். அதேநேரத்தில் இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் சாலையின் இருபுறமும் அளவுக்கு அதிகமான இடத்தை ஆக்கிரமித்ததால் அங்கு போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வேலூர் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சார்பனாமேட்டில் பில்டர்பெட் டேங்க் தொடங்கி முத்துமாரியம்மன் கோயில் சந்திப்பு வரை உள்ள தள்ளு வண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். அப்போது வியாபாரிகளுக்கும், மாநகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் பில்டர்பெட் ரோடில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.