ஆரணி, ஜூலை 28: ஆகாரம் ஊராட்சியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து மனைபிரிவுகளாக மாற்றி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் அரசுக்கு சொந்தமான இடம், குளம்புறம்போக்கு, அனாதின நிலம், மேய்ச்சக்கால் புறம்போக்கு என சுமார் 46 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தினை கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, அந்த இடத்தில் முள்வேலி அமைத்தும், வீட்டுமனைகள் பிரிவுகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், ஊராட்சிக்கு சொந்தமான அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, ஆர்டிஓ தனலட்சுமியிடம் அரசு இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். மேலும், பொதுமக்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ விசாரித்து நடடிவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.