பேரையூர், ஜூலை 4: பேரையூர் அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரையூர் அருகே அனுப்பபட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறும்போது, ‘‘நத்தம் காலியிடத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இடிக்கும் நடவடிக்கையை அனுமதிக்க மாட்டோம். இந்த பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்ற உத்தரவு என்பதால், ஜூலை 20ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.