உசிலம்பட்டி, ஜூலை 30: உசிலம்பட்டி அருகே, ஆனையூர் கண்மாய் வழியாக பூதிப்புரம் கிராமத்திற்கு செல்லும் பாதையை, தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது., இதனால் பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை பலமுறை பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இருப்பினும் அந்த பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பாக ஆனையூர் மற்றும் கட்டக்கருப்பன்பட்டி கிராம மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் தாசில்தார் பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதை தொடர்பான பிரச்னையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.