சேலம், அக்.4: சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ₹87 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் கடந்த ஓராண்டில் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 1.83 லட்சம் ஏக்கர் பாசன வசதி கொண்ட நிலமாகவும், 2.18 லட்சம் ஏக்கர் புஞ்சை எனப்படும் வறண்ட நிலமாகவும், 21 ஆயிரம் ஏக்கர் நிலம் மானாவாரி நிலமாகவும், 36 ஆயிரத்து 627 ஏக்கர் நிலம் காலியிடமாகவும், 22 ஆயிரத்து 599 ஏக்கர் நிலம் கட்டிடங்களாக உள்ளன. ஆனால் அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் பல ஆண்டாக ஆன்மீக வாதிகள், பக்தர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு முதல்வர் மு.க. ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர். கோயில் சொத்துகள் குறித்து வெளிப்படைத்தன்மையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டில் 3.43 லட்சம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டது தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த கோயில் நிலங்களில் 72 சதவீதமாகும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் பல கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்கள் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய கோயில்கள் உள்ளன.இந்த கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை மீட்டு கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து சேலம் மாவட்டத்தில் பல கோயில்களின் பழைய ஆவணங்களை வைத்து கட்டிடங்கள், காலிநிலம், விவசாய நிலம், புன்செய் நிலம், பாசன வசதி கொண்ட நிலம், மானாவாரி நிலம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை வைத்து இதுவரை 50 ஏக்கர் 58 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 210 சதுரடி மனைகளும், 17 ஆயிரத்து 643 சதுரடி கட்டிடங்களும் மீட்கப்ட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ₹87 கோடியே 16 லட்சமாகும். இன்னும் மீட்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் ஆக்கிரமிப்பில் உள்ள 90 சதவீதம் நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.