அவிநாசி, ஏப்.21: திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறுவகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், மரஎண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின்கீழ், ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில் நுட்பமாக, பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த, டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல்கலப்பைகள், தார்பாலின் மற்றும் விசைதெளிப்பான் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அவிநாசி வட்டாரம் புஞ்சை தாமரைக்குளம் கிராமத்தில் தெய்வசிகாமணி மற்றும் வேட்டுவபாளையம் கிராமத்தில் விமல் ஆகியோருக்கு சுழல்கலப்பை மானிய விலையில் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டது. மேலும் காணூர், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாலின் மற்றும் விசைத் தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன், தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு மற்றும் உதவி வேளாண்மை அலுவலகள் தினேஷ், சின்னராசு, வினோத் ஆகியோர் நேரில் சென்று வேளாண் பண்ணைக்கருவிகள் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். அப்போது ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்து பயனடைந்தனர்.