தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வத்தல்மலை, கொமத்தம்பட்டி, ஆவரங்காடு, லளிகம், நல்லம்பள்ளி, சிவாடி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் அவரை செடிகளை வளர்த்து வருகின்றனர்.
அவரை செடி நடவு செய்த 60 நாளில் இருந்து காய்கள் பறிக்கலாம் என்பதால், இப்பகுதி விவசாயிகள் அவரை செடியை நடவு செய்து வருகின்றனர். ஆவரங்காடு பகுதியில் அவரை நடவு செய்த விவசாயிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாமல் விவசாயிகள் அவரை செடி நடவு செய்துள்ளோம். நடவு செய்த 60 நாளில் காய் பறிக்க துவங்குவோம். வாரந்தோறும் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வரை காய்கள் பறிக்கப்படும். தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50வரை கொள் முதல் விலைக்கு விற்கிறோம்,’ என்றனர்.