Wednesday, June 18, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் அவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்!

அவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஉடலின் ஆரோக்கியம் பேண இரண்டு விஷயங்கள் அவசியம். உணவாலும், காற்றாலும், நீராலும், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளாலும் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க வேண்டும். இதனை Detox என்கிறோம். அதன் பிறகு தேவையான ஊட்டத்தை உடலுக்கு அளிக்க வேண்டும். உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை அகற்றாமல் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது முழுமையான பலனை அளிக்காது. டீட்டாக்ஸ் அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.உடலுக்கு செய்யப்படும் இந்த டீட்டாக்ஸ் போல, தற்போது நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கைக்கும் டீட்டாக்ஸ் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், தொலைக்காட்சி திரை, சினிமா திரை என்று திரைகளால் ஆனதே வாழ்க்கை என்று நவீன வாழ்க்கை மாறிவிட்டது. குறிப்பாக, இணையதள ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்திருப்பது நம்முடைய உடல், மனம் இரண்டையுமே வெகுவாக பாதிக்கிறது. உளவியல் மருத்துவர் ஜனனியிடம் டிஜிட்டல் டீட்டாக்ஸ் பற்றியும், அதன் இன்றைய அவசரத்தேவை பற்றியும் கேட்டோம்…‘‘எல்லாவற்றுக்கும் இணையதளத்தை சார்ந்திருக்கும் இன்றைய வாழ்க்கை முறையால் மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மருத்துவத்துறை மாபெரும் சவாலை அன்றாடம் சந்தித்து வருகிறது. ‘டிஜிட்டல்’ என்ற மறைமுகமான நச்சு இன்று ஆழமாக புரையோடிக் கொண்டிருக்கிறது. அதிநவீனம் என்ற பெயரில் மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர், செல்போன், ஐ-பேட், ஐ-போன் முதலானவற்றை வரைமுறையின்றி பயன்படுத்தி வருவதால், மனிதனின் உடல் மட்டுமில்லாமல் மனமும் நச்சுப்பொருட்களின் உறைவிடமாக மெல்லமெல்ல மாறிக்கொண்டு வருகிறது.இந்த சைலண்ட் கில்லரால் குழந்தைகள், மாணவப்பருவத்தினர், இளைய தலைமுறையினர், வயோதிகர் எனப் பல தரப்பினரும் மனதளவில், உடலளவில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நமது ஆயுட்காலத்தைப் படிப்படியாக குறைத்து வரும் இந்த மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்க முடியாது. ஆனால், அதனை சாமர்த்தியமாகக் கையாளும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டது. இணையதளம் மூலமாகத்தான் நம்மால், தொலைக்காட்சி பார்த்தல், போனை உபயோகித்தல், நண்பர்களுடன் அரட்டை, வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளைத் தங்குதடையில்லாமல் மேற்கொள்ள முடிகிறது. இன்றைய சூழலில் டிஜிட்டல் டெக்னாலஜி துணை இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஏராளமானோர் வந்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களில் ஒரு பகுதியினர் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று சொல்லலாம்.மேலும், நிறையப் பேர் டிஜிட்டல் சாதனங்கள் மீது அளவுகடந்த ஆர்வமும் கொண்டுள்ளனர். ஒரு சிலரால், இந்த அதீத ஆர்வத்தை அவரவர் மன உறுதியால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இன்றைய சூழலில் எவ்வளவு முயற்சி மேற்கொண்டும் இந்த சாதனங்களின் மீதான ஆர்வத்தைச் சிலரால் குறைத்துக் கொள்ள முடியவில்லை.’’டிஜிட்டல் வலையில் சிக்கிக் கொள்ள காரணம் என்ன?‘‘கூட்டுக்குடும்பம் என்ற வரப்பிரசாதமான வாழ்க்கை முறை என்றோ அழிவுப்பாதையை நோக்கி சென்றுவிட்டது. அப்போதெல்லாம் பெற்றோர், பெரியப்பா-பெரியம்மா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை மற்றும் அவர்களுடைய மகள்-மகன் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதன் காரணமாக குழந்தைகள் தொடங்கி, சிறுவர், சிறுமியர், இளம் வயதினர் என அனைவரும் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரியும். விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி பேசி மகிழ்ந்தனர்.;பாட்டி கதைகள் கூற, குழந்தைகள் கேட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா தலங்களுக்கும், ஆன்மிக தலங்களுக்கும் மொத்தமாக சென்று வந்தனர். பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு என்றொரு பாடம் இருந்தது. இதன் காரணமாக, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படல், தவறான பாதைக்குச் செல்லுதல் போன்றவற்றுக்கான வாய்ப்பும் இல்லாமல் போனது.இன்றைய சூழலில், கூட்டுக்குடும்பம் என்ற முறை சிதைந்து அனைவரும் தனிமை என்ற சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டோம். இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில், குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. எனவே, இன்றைய தலைமுறையினர் தங்களுடைய ஆழ் மன உணர்வுகளை வெளிப்படுத்த வடிகால் இன்றி தவிக்கின்றனர்.கோடை விடுமுறைக்காலம் பயிற்சி வகுப்புகள், சிறப்பு பயிற்சி வகுப்புகள், விளையாட்டு பயிற்சி முகாம்களில் பங்கேற்றல், நுழைவுத் தேர்வுக்குத் தயாராதல் என கழிந்து விடுகின்றது. வீட்டில் நெருக்கமான உறவுகளின் துணை இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் போன், ஐ-பேட் பயன்படுத்தத் தொடங்கி நாளடைவில் தங்களை அறியாமலேயே இவற்றிற்கு அடிமையாகின்றனர்.’’தீவிர டிஜிட்டல் பயன்பாட்டால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன?‘‘டிஜிட்டல் டிவைஸ்களை வரைமுறை இல்லாமல் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால், மனம் மற்றும் உடல் அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏராளம். ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா போன்றவற்றில், டிஜிட்டல் அடிக்‌ஷன் என்பது மக்கள் நலனில் பெரும் சுகாதாரப் பிரச்னையாக இருந்து வருகிறது. எனவே, சில நாடுகள் அனைத்தும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நமது அரசும் இது பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாகும் வகையில், பிரச்சாரம் செய்து வருகிறது.டிஜிட்டல் அடிமைத்தனத்தை எப்படி கண்டுபிடிப்பது?‘‘ஒருவர் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகியுள்ளாரா என்பதைக் கண்டுபிடிப்பது என்பது நிறைய விஷயங்களை உள்ளடக்கியது. அத்தகைய நடைமுறைகளில் ஆன்-லைன் சூதாட்டம், வீடியோ கேம்ஸ், போர்னோகிராஃபி, சோஷியல் மீடியாக்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்-லைன் ஷாப்பிங் முதலானவை பொதுவான விஷயங்களாகக் கருதப்படுகின்றன. டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமைப்பட்டு உள்ளவர்கள் ஸ்மார்ட் போனை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றிற்குத்தான் மக்கள் முக்கியமாக அடிமையாகி உள்ளனர். டிஜிட்டல் டெக்னாலஜிக்கு அடிமைப்பட்டு கிடப்பவர்களை அடையாளம் காணுவதற்கு இன்னும் பல வகையான வழிமுறைகள் கையாளப்படுகின்றன.’’என்ன மாதிரியான அறிகுறிகள் தெரியும்?‘‘டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு அடிமையானவர்கள் மனம், உடல்ரீதியாகப் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். மனரீதியாகப் பார்க்கும்போது மனச்சோர்வு, மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களுடன் சேர விரும்பாமல் ‘தனிமை விரும்பி’களாக காணப்படுவார்கள். இவை தவிர நினைவாற்றல் குறைதல், பயம், பதற்றத்துடன் காணப்படுதல், கோபப்படுதல், உடன் இருப்பவர்களை அடிக்க முற்படல், எதிர்மறை எண்ணமான தற்கொலை உணர்வுக்கு ஆட்படல் எனப் பலவிதமான மனம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவார்கள்.உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்று கூறும்போது முதுகு தண்டுவடம் பாதிக்கும். தலை, கழுத்து, கண் ஆகிய உறுப்புகளில் வலி தோன்றும். கைவிரல்கள் மடங்கிப் போகும். ஸ்மார்ட் போன் முதலான மின்னணு சாதனங்களில் நோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்கள் அதிகம். இதனால், தோல் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.’’டிஜிட்டல் அடிக்‌ஷனுக்குத் தீர்வு என்ன?‘‘டிஜிட்டல் அடிமைத்தனத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். அப்படி செய்வதால் இதனைக் குணப்படுத்துவது எளிது. நோய் முற்றிய நிலையில் சரி செய்வது கஷ்டம். மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையான முதுமைப் பருவத்தினரைக் குணப்படுத்துவது கஷ்டம். டிஜிட்டல் டீட்டாக்சிஃபிகேஷன் பாதிப்புக்கு உள்ளானவர்களை, நோயின் தீவிரம் பொறுத்து சிகிச்சைக்காக வருபவர்களை உள் நோயாளிகள், புற நோயாளிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.தன்னைத்தானே உணர்ந்து சிகிச்சைக்காக வருபவர்களைக் குணப்படுத்துவது எளிது. அவர்களுக்குப் புறநோயாளி என்ற நிலையிலேயே சிகிச்சை போதுமானது. இவர்கள் நாங்கள் சொல்வதை முறையாகப் பின்பற்றுவார்கள். மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட்டு வருவார்கள். நோயின் பாதிப்பு அதிகமாகி, மற்றவர் உதவியுடன் அழைத்து வரப்படும் நோயாளிகளை அட்மிட் செய்துதான் சிகிச்சை தர முடியும்.ஏனென்றால், இவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை அறிய மாட்டார்கள். மேலும் டிஜிட்டல் சாதனங்களுடன் நேரத்தைச் செலவிடுவதைத்தான் வாழ்க்கை என்று நினைப்பார்கள். இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்களை அட்மிட் செய்வதன் மூலமாகத்தான் டிஜிட்டல் என்ற நச்சுப்பொருளிடம் இருந்து, அவர்களை விலக்கி வைக்க முடியும்.ஏனென்றால், மருத்துவமனைக்குள் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை எல்லாம் எடுத்து வர அனுமதிக்க மாட்டோம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை, மது முதலான பொருட்களிடம் இருந்து விலக்கி வைக்கிறோம் அல்லவா? அதேபோன்றுதான் இதுவும். இவர்களைக் குணப்படுத்துவதற்கென்று மருந்து, மாத்திரைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் கவுன்சிலிங் தரும் அணுகுமுறையும் மேற்கொள்ளப்படுகிறது.ஒரு சிலருக்கு மருந்து, மாத்திரைகள் போதுமானதாக இருக்கும். கொஞ்சம் பேருக்குக் கவுன்சிலிங் மட்டும் தேவைப்படும். சிலருக்கு இரண்டுமே தேவைப்படும். டிஜிட்டல் சாதனங்களுக்கு ஆட்பட்டவர்களைக் குணப்படுத்த தரப்படும் கவுன்சிலிங்கில் Cognitive Behavioral Therapy மிகவும் முக்கியமானது. அடிக்ஷனுக்கு மட்டும் இந்தக் கவுன்சிலிங் தரப்படுவது இல்லை. தற்கொலை உணர்வு, தன்னம்பிக்கை குறைவாக இருத்தல், பெற்றோர்களிடம் எதுவும் பிரச்னையா? குடும்ப பிரச்னை, தவறான நட்பால் இப்பாதிப்பு வந்ததா? அந்த நட்பை எப்படி தவிர்ப்பது? அவர்களிடம் இருந்து எவ்வாறு விலகி இருப்பது? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.நமது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும். பொருளாதார வசதி படைத்தவர்கள் தங்கள் மகள்-மகன் கேட்டதற்காக ஸ்மார்ட் போன், லேப்-டாப் வாங்கி தரக்கூடாது.; டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகாமல் இருப்பவர்கள், ஃபேஸ் புக், வாட்ஸ்-அப் போன்றவற்றைப் பார்க்கவும், அவற்றிற்குப் பதில் அளிக்கவும் நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும்.; இச்சாதனங்களின் தொடர்பைத் தவிர்த்தாலே நம் ஆயுள் கூடும். டிஜிட்டல் என்ற நச்சுப்பொருளின் பாதிப்புக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வரும்முன் காப்பதே சிறந்த வழி!’’ என்கிறார்.இவையெல்லாம் உங்களிடம் இருக்கிறதா?!* எல்லா நேரமும் தனிமையில் கம்ப்யூட்டர், டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனில் மூழ்கி இருத்தல்.* டிஜிட்டல் டிவைஸைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நேரங்களில், திடீரென யாராவது அறைக்குள் வந்தால், அதை மறைத்தல்.* கம்ப்யூட்டர் அல்லது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேள்வி கேட்டால், ‘நான் எதுவும் பார்க்கவில்லையே’ என்று மழுப்புதல்.* ஒருவர் ஆன்-லைன் செயல்பாட்டில் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில் அதற்குத் தடை ஏற்படுத்தும்போது அவர் என்ன மாதிரி ரியாக்ட் செய்யும் விதம்.* குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் தராமல் முன் பின் பார்த்து அறியாத, முகம் தெரியாத ஆன்-லைன் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.* டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையான காரணத்தால், படிக்கிற இடம், வேலை செய்கிற அலுவலகம் ஆகிய இடங்களில் தங்களுக்கு உரிய வேலையைச் செய்யாத காரணத்தால், தவறான அபிப்பிராயங்களுக்கு ஆளாகுதல்.* வீட்டு வேலைகள், குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றை செய்யாமல் இருத்தல் அல்லது அலட்சியம் காட்டல்.* எந்த நேரமும் ஆன்-லைன் பற்றி மட்டும் பேசுவது; வேறு எதிலும் அவர்களுடைய சிந்தனை இல்லாத நிலை.* தூக்கமின்மை, அன்றாட வேலைகளைச் செய்யாமல் இருத்தல், பசியின்மை.– விஜயகுமார்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi