Tuesday, July 16, 2024
Home » அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….

அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்ஹெல்த் அண்ட் பியூட்டிசிறு பிள்ளைப்பருவம் துவங்கி எத்தனை வயதானாலும் பெண்களுக்கு மருதாணியின் மேல் உள்ள மோகம் குறைவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கியப் பொருள் மருதாணி. மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இட்டு இரவெல்லாம் வைத்திருந்து காலையில் எழுந்து கைகள் சிவந்திருக்கிறதா என்று பார்ப்பது பெண்களின் சுவாரஸ்யமான பழக்கங்களில் ஒன்று. அதன் நிறமும் அருமையான மணமும் மருதாணியின் குளிர்ச்சியான தன்மையும் தான் அத்தகையதொரு ஈர்ப்பை அதன் மேல் உண்டாக்குகிறதோ என்னவோ? ஆனால், மருதாணி என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட. சித்த மருத்துவர் தீபிகா மருதாணியின் நல்ல பலன்களை பற்றி இங்கே எடுத்துரைக்கிறார்.மருதோன்றி என்பது மருவிதான் மருதாணி என்று ஆயிற்று. சித்த மருத்துவத்தில் இதற்கு அழவணம் என்றும் சரணம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அழவணம் என்றால் அழகு மற்றும் வண்ணம் கொடுப்பது என்று பொருள். (சரணம் – பாதம்) பாதங்களுக்கு பயன்படுத்துவதால் சரணம் என்ற பெயர் வந்தது. மருதாணி சிறுமர வகையினை சார்ந்தது. மருதாணி இந்தியா முழுதும் விளையும் பயிராகும். இதன், இலை, பூ, பட்டை, விதை போன்றவை மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன. கூர்மையான சிறு இலைகளையும், மணமுடைய வெள்ளை மலர்களையும் பெற்றிருக்கும் மருதாணியின் தாவரவியல் பெயர் Lowsonia inermis. இதில் கண்களைக் கவரும் வண்ணம் கொடுப்பது Lowsone என்னும் வேதிப்பொருள்தான். மருதாணி அழகுக்காக பயன்படுவது மட்டுமில்லாமல் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களையும் உடையது. மருதாணி இலைக்கு Anti-oxidant, Anti Rheumatic, Anti neuralgic, Wound healing property போன்ற நோய் தீர்க்கும் தன்மைகள் உள்ளது என்று பல ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. சித்த மருத்துவத்திற்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட பித்த சமனி மருதாணி. உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இது நோயைக் கணிக்கவும் பயன்படுகிறது. கைகள் நன்கு சிவந்திருந்தால் நல்ல கணவன் கிடைப்பான் என மக்கள் சுவாரஸ்யமாக கதைச் சொன்னாலும், உண்மை என்னவென்றால் மருதாணி வைத்த விரல்கள் பித்த உடல் கொண்டவர்களுக்கு கருஞ்சிவப்பாக மாறும் என்பதுதான். மற்றவர்களுக்கு அந்த அளவு சிவக்காது. செஞ்சிவப்பாக இருக்கும்.மருதாணி வெளிப்பூச்சாக பயன்படுவதோடு அல்லாமல் உட்புறமாக எடுக்கும்போது சிறந்த மருத்துவப் பயன்களை தருகிறது. பல சரும நோய்களுக்கும் சிறந்ததாக இருக்கிறது. மருதாணி இலை 5 கிராம், பூண்டு ஒரு பல், மிளகு 5 சேர்த்து அரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து ஐந்திலிருந்து ஏழு நாட்கள் வரை சாப்பிட்டு வர தோலில் ஏற்பட்ட புண்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளும் குறையும்.;மருதாணி இலை ஊறல் கஷாயம் (இலை ஊற வைத்த தண்ணீர்) செய்து சுளுக்கு, தாபிதம் (வீக்கம்) சிறு காயம் இவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம். (சுடுநீர் டவல் ஒத்தடம் போல). இலையை அரைத்து அல்லது நசுக்கி சிறு துணியில் வைத்து கண்களில் கட்ட கண் வேக்காடு (சூட்டினால் ஏற்படும் கட்டி) மூன்று நாட்களில் குறையும். இலையின் ஊறல் குடிநீரை வாய்ப்புண்ணிற்கு கொப்புளிக்கப் பயன்படுத்தலாம். பெண்களின் வெள்ளைப்படுதல் சமயங்களில் இந்த நீரை அவ்விடத்தில் கழுவ பயன்படுத்தலாம். அம்மை போட்ட காலங்களில் அம்மையினால் கண்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க இலையை அரைத்து இரு கால்களுக்கு அடியிலும் வைத்து கட்டலாம். காய்ச்சல் இருக்கும்போது செய்ய வேண்டாம். மருதாணியின் வேர்ப்பட்டையினை கஷாயமிட்டு மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாட்டை (அதிகப்படியான ரத்தப்போக்கை) நிறுத்த உள்ளுக்குப் பயன்படுத்தலாம். அரை தேக்கரண்டி (டீஸ்பூன்) வேர்ப்பட்டைத் தூள் எடுத்து 120 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து அது 60 மில்லி தண்ணீராக சுருங்கும் வரை கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இது ஒரு அரிய மருந்தாக பயன்படுகிறது. விந்துவில் உள்ள உயிரணுக்களின் குறைபாட்டால் வருந்தும் ஆண்கள், கால் தேக்கரண்டி மருதாணி இலைச்சாற்றில் 90 மில்லி நீரினை கலந்து நான்கு கிராம் பனை வெல்லம் சேர்த்து பருக உயிரணுக்கள் எண்ணிக்கை பெருகும். பித்தத்தால் ஏற்பட்ட தலைவலிக்கு பூ அல்லது விதைகளின் ஊறல் கசாயத்தைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் தலைவலி குறையும். (சுடுநீர் டவல் ஒத்தடம் போல). மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மையைப் போக்கும் தன்மை மருதாணியின் பூக்களுக்கு உள்ளது. பூக்களை சேகரித்து தலையணையின் கீழ் வைத்து உறங்க மன உளைச்சல், பயம், கவலை போன்றவை குறைந்து மன அமைதி உண்டாகி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். இது போலவே மருதாணி விதைகளையும் சாம்பிராணி தூபங்களுடன் சேர்த்து தூபம் போட நாம் இருக்குமிடத்தையே தூய்மை பெற செய்வதோடு மன அமைதியையும் கொடுக்கும். இதைப் போலவே முக்கியமான ஒன்று நரை முடிக்காக தேய்க்கும் ரசாயன கலவைகள் (டை) தோல் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் அவற்றை தவிர்த்து இயற்கை நமக்களித்த அற்புதமான வரமான மருதாணியை பயன்படுத்தலாம். மருதாணியுடன், அவுரி அரைத்து பொடி செய்து இயற்கையாக முடிக்கு சாயம் போட பயன்படுத்தலாம்.பாத எரிச்சல் நீங்க மருதோன்றி இலைச் சாற்றை தேய்க்க பாத எரிச்சல் குறையும். வெண் குஷ்டத்திற்கு மேல் இலையை அரைத்து பூச நல்ல பலன் தரும். கைகளில் அழகுக்காக மருதோன்றி வைப்பது போல எப்போதாவது வைத்துக் கொள்ளலாம். மருதாணியை அடிக்கடி வைத்து வந்தால் நகச் சொத்தை வராமல் தடுக்கும். மருதாணி வைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி இயற்கையாக குறையும். மருதோன்றி வைப்பதால் பித்தம் குறையும். அதனால் வயிற்று வலி குறைவாக இருக்கும். சிறு பிள்ளை காலம் முதல் மருதாணியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர நரை முடி அவ்வளவு சீக்கிரம் எட்டிப்பார்க்காது.முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். மருதாணியின் சாறெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்ச வேண்டும். ஆனால், தற்போது மருதாணிக்கு பதிலாக ஹென்னா என்னும் பொருளை பயன்படுத்துகின்றனர். இதில் கூறப்பட்டுள்ள அருமையான பலன்கள் அனைத்தும் அசல் மருதாணியை பயன்படுத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!– சக்தி

You may also like

Leave a Comment

6 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi