அரக்கோணம், ஜூன் 27: அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் புதைந்து வெறும் ராஜகோபுரத்துடன் காணப்பட்ட அழகுராஜ பெருமாள் கோயில் தினகரன் நாளிதழின் தொடர் முயற்சியால் மீண்டெழும் நிலையில், அதன் அருகில் குளமாக கருதப்படும் இடத்தில் சீரமைப்பு பணியின் போது கிடைத்த சாமி சிலைகள் அப்பகுதி மக்கள், பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் வெறும் ராஜகோபுரத்துடன், அப்பகுதி மக்களால் அங்கு ஒரு காலத்தில் பெருமாள் கோயில் இருந்தது. அதன் உற்சவர் மட்டும் ஜலநாதீஸ்வரர் கோயிலில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அப்பகுதி சுமார் 150 ஆண்டுகளாக கோயில் ராஜகோபுரத்தை நுழைவாயிலாக கொண்ட குடியிருப்பாக மாறி ேபாயிருந்தது.
இங்கு அழகுராஜ பெருமாள் கோயில் என்ற புராண, வரலாற்று சிறப்புமிக்க கோயில் இருந்தது என்றும், அது மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து தினகரன் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகின. இதையடுத்து இந்து அறநிலையத்துறை அழகுராஜ பெருமாள் கோயிலின் வரலாற்று தகவலை அடிப்படையாக கொண்டு தனது பட்டியலில் இணைத்துக் கொண்டதுடன், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு குடியிருப்புகள் அகற்றப்பட்டு, தற்போது அதே இடத்தில் தனியார் ஒருவரின் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான முறையில் அழகுராஜ பெருமாள் கோயில் கற்கோயிலாக உருவெடுத்து வருகிறது.