மதுரை, நவ. 26: அழகர்கோயிலில் ரூ.49.25 கோடியில் நடைபெற இருக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அழகர்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே பல்வேறு வளர்ச்சி பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.49.25 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன்படி பணியாளர் குடியிருப்பு, அர்ச்சகர் குடியிருப்பு, குடிநீர் மேல்நிலை தொட்டி, பக்தர்கள் தங்குமிடம், நவீன கழிப்பறை, நவீன உணவகம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான இடங்களை கோயில் அதிகாரிகள் வரைபடங்கள் உதவியுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் செந்தில்குமார், மீனாட்சி பிரியா, மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்டபொறியாளர் வெங்கடேஷ் பிரபு, உதவி பொறியாளர் கிருஷ்ணன், சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.