மதுரை, ஜூன் 3: அழகர்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா நேற்று மாலை தொடங்கியது. இதையொட்டி பல்லக்கில் தேவியர்களுடன் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோயில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல தீவட்டி பரிவாரங்களுடன் ஆடி வீதிகள், ராமர் சன்னதி வழியாக, பதினெட்டாம்படி சென்றடைந்தார். இதையடுத்து அங்கிருந்து வசந்த மண்டபம் சென்றார். பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
மீண்டும் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக இருப்பிடம் சென்றடைந்தார். வசந்த விழாவையொட்டி வசந்த மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களும் மாலையில் வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் சுந்தரராஜப் பெருமாள் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.