காரைக்குடி, ஆக.15: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவிக்கு என்சிசி 9வது பட்டாலியன் சார்பில் கவுரவ கர்னல் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநகரத்தின் துணை இயக்குநர் கமாண்டர் ஜி.ராகவ் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கவுரவ கர்னல் பட்டத்தை பெற்றுக்கொண்டு பேராசிரியர் முனைவர் ஜி.ரவி பேசுகையில், தேசிய மாணவர்கள் படையில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தலைமைப் பண்பு, சுய ஓழுக்கம், காலம் தவறாமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும். தவிர நடைபயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ள முடியும். அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6 இணைப்பு கல்லூரிகளில் மட்டுமே என்சிசி யூனிட் செயல்பட்டு வருகிறது. அதனை அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் முனைவர் சுப்பையா, மணிசங்கர், திருமலைச்சாமி, என்சிசி 9வது பட்டாலியன் தலைவர் லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.மிஸ்ரா, என்சிசி திருச்சி தலைமையகத்தின் குரூப் கமாண்டர் ஓய்.விஜயகுமார், என்சிசி தொழில்நுட்ப அதிகாரி லெப்டினட் கர்னல் ஜி.வெற்றிவேல், பானுரவி, முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். லெப்டினட் முனைவர் வைரவசுந்தரம் நன்றி கூறினார்.