திருச்சி, பிப்.15: திருச்சி-கரூர் ரோடு அல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-கரூர் நெடுஞ்சாலை அல்லூர் கிராமத்தை சேர்ந்த பகுதிவாசிகள் தங்களுடைய பகுதியை கடந்து செல்லும் சாலையின் ஓரங்கள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளதாகவும், மாநில நெடுஞ்சாலைத்துறை உடனடியாக அதை சீரமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள காலனி பஸ் ஸ்டாப் அருகில் பாதுகாப்புக்காக பேரிகாட் அமைக்கப்பட்டுள்ளது. கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் முக்கியமான கோவில் உள்ளது. ஆரம்பப் பள்ளி வாகனம், மேல்நிலைப்பள்ளி வாகனம் அனைத்தும் அல்லூர் காலனி பஸ் ஸ்டாப் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ரயில்வே கேட் சாலை சாலை ஓரம் அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் சுமார் கடந்த ஒரு வருடமாக நெடுஞ்சாலையின் ஓரம் 10 அடிக்கு மேல் சாலை சேதமடைந்து உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். சேதமான சாலை அருகில் அப்பகுதி மக்கள் வணங்கி வரும் இரண்டு கோயில்களின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் உடனடியாக பழுதடைந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.