கரூர், ஜூலை 22: உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்), உலகத்தரம் வாய்ந்த காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள டிஎன்பிஎல் ஆலை நிர்வாக செயல்பாடுகள், உற்பத்தி, ஆலை விரிவாக்க பணி, வனத்தோட்ட ஆராய்ச்சி மேம்பாட்டு ஆலை, விற்பனைத்துறை, செயல்பாடு முன்னேற்றங்கள், காகித ஆலை கூழ் உற்பத்தி நுண்ணறிவு போன்றவை குறித்து அலுவலர்களுடன் இணைந்து தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் அறிவுரையின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள டிஎன்பிஎல் ஆலையில் அனைத்து மூத்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களின் சிறப்பான பணியால், உலகத்தரம் வாய்ந்த காகிதங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ஆய்வு முடிவு குறித்த விவரத்தை தமிழக முதல்வரிடம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டிஎன்பிஎல் ஆலையை பொறுத்தவரை உலகத்திலேயே சிறப்பான ஒரு ஆலை என உலகத்தரம் வாய்ந்த பல நிறுவனங்கள் சான்றளித்துள்ளார்கள். எனவே, காகித ஆலையை மென்மேலும் வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதுதான் முக்கிய நோக்கமாகும் என்றார். முன்னதாக, டிஎன்பிஎல் விருந்தினர் இல்ல வளாகத்தில் அமைச்சர் டிஆர்பி. ராஜா மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆய்வின்போது, டிஎன்பிஎல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய்குமார், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, முதன்மை காவல் துறை விழிப்புணர்வு அலுவலர் பண்டி கங்கதர், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகர், டிஎன்பிஎல் பொது மேலாளர்கள் கலைசெல்வன் (மனிதவளம்), கிருஷ்ணன் (செயல் இயக்குநர்), சீனிவாசன் (வனத்தோட்டம்) ஆகியோர் உடனிருந்தனர்.