நன்றி குங்குமம் டாக்டர்புற்றுநோய் முதல் சாதாரண கட்டிகள் வரை அனைத்துவிதமான அறுவை சிகிச்சையிலுமே, அதற்கான பின் விளைவுகள் இல்லாமல் இருக்காது. பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி, ரத்தக்கசிவு என சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கும். மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும்போதே இவற்றை, நம்மை கவனித்துக் கொள்ளும் செவிலியர்களும், மருத்துவர்களும் குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டால் பெரிதாக பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது, அதற்கான அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன போன்ற சந்தேகங்கள் நம் அனைவருக்குமே இருக்கிறது.வயிறு சம்பந்தமான அறுவை சிகிச்சைகளே சாதாரண எளிய மக்கள் அடிக்கடி செய்து கொள்ளக் கூடியதாக இருப்பதால், வயிறு சம்பந்தமான அறுவைசிகிச்சைக்குப் பின்னால் வரும் சிக்கல்கள், அதற்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணன் பகிர்கிறார்…லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படும் Minimally invasive அறுவை சிகிச்சைகளில் சிக்கல்கள் அதிகம் வருவதில்லை.ஒவ்வொரு நோய்க்கும் அந்த நோயின் தீவிரம், நோயாளியின் நிலை போன்றவற்றுக்கு ஏற்றவாறு சிறு அளவிலான அறுவை சிகிச்சையிலிருந்து பெரிய அறுவைசிகிச்சை வரை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். முன்பெல்லாம் வயிற்றுக்குள் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், வயிற்றை கிழித்து தையல் போட்டுத்தான் செய்வார்கள். புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் பிடிக்கும். அந்த காயம் ஆறும் வரை டிரஸ்ஸிங் மற்றும் சிகிச்சை முடியும் வரையிலும், சில நேரங்களில் ஆபரேஷன் முடிந்து ஒரு வாரம் வரை கூட மருத்துவமனையில் உள்நோயாளியாக வைத்திருப்பது வழக்கம். இப்போது பெரும்பாலும் லேப்ராஸ்கோப்பி முறையில் Minimally invasive எனப்படும் சிறு துளையிட்டு செய்வதால் பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்கள் வருவதில்லை. உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, பித்த நாளங்கள் போன்ற வயிறு உறுப்புகளுக்கான அறுவை சிகிச்சைகள் வயிற்றுப் பகுதியில் செய்யப்படுகிறது. இப்போது அல்சர் நோய்க்காக ஆபரேஷன் செய்வது வெகுவாக குறைந்துவிட்டது. ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு வெவ்வேறு விதமான; சிக்கல்கள் வரலாம். பித்தப்பை அறுவை சிகிச்சைபித்தப்பை கல் நீக்கும் ஆபரேஷன் லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யப்படும். வெளிநாடுகளிலெல்லாம் இதை டே கேர் சர்ஜரி(Daycare Surgery) என்று சொல்வார்கள். காலையில் செய்துவிட்டு, மாலையில் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். நம்மூரில் அதிகப்படியாக ஒருநாள் மட்டும் மருத்துவமனையில் வைத்திருந்து மறுநாள் அனுப்பிவிடுகிறோம். இதில் சிக்கல் மிகவும் குறைவு. அப்படியே பிரச்னைகள் வந்தாலும் நோய்த்தொற்று, வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவையே பித்தப்பை ஆபரேஷனுக்குப் பின்னால் வரும் சிக்கல்களாக சொல்லலாம். முன்னெச்சரிக்கையாக கவனத்தில் கொள்ளக்கூடிய விஷயங்கள், 2 மாதத்திற்கு மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி 3 மாதத்திற்கு அதிகப்படியான பாரம் தூக்குவது கூடாது. சாதாரணமான வேலைகளைச் செய்யலாம். அவர்கள் உடல்நிலைக்கேற்றவாறு பணிக்கு செல்ல ஆரம்பிக்கலாம்.குடல் வால் அறுவை சிகிச்சைகுறிப்பிட்ட இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோய்த்தொற்று மட்டுமே வரக்கூடிய சிக்கலாக இருக்கும். சிலருக்கு காயத்தில் ரத்தப்போக்கு, தொற்று, அறுவை சிகிச்சையின்போது பின் இணைப்பு வெடித்ததால் ஏற்படக்கூடிய வயிற்றின் தொற்று, சிவத்தல் மற்றும் வீக்கம் வரலாம். லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்திருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 1 முதல் 3 வாரங்களுக்குப் பிறகு வேலைக்குத் திரும்பலாம். திறந்த அறுவை சிகிச்சையாக இருந்தால், அதற்கு 2 முதல் 4 வாரங்கள் ஆகலாம்.இரைப்பை புற்றுநோய் அறுவைசிகிச்சைவயிற்றில் புற்றுநோய் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும், வழக்கமாக கீமோதெரபி சிகிச்சை கொடுப்போம். நோயாளிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவறாமல் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடுமையான வலி, மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.உணவுக்குழாய் அறுவைசிகிச்சைஉணவுக்குழாய் அறுவை சிகிச்சைக்குப்பின், கொஞ்சநாட்கள் பேசுவதற்கே சிரமப்படுவார்கள். தொண்டை கட்டிவிடும்; குரல் மாறி இருக்கும்; இருமல் அதிகமாக வரக்கூடும். குரல் மாறிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. தானாக சரியாகிவிடும். பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். 2 வாரங்கள் அதிகம் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மெதுவாக சிறிது கெட்டியான கஞ்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். போகப்போக அளவைக் கூட்டி சாதாரணமாக சாப்பிட ஆரம்பிக்கலாம். ஆரம்பத்திலேயே அவசரப்பட்டு அதிகமாக சாப்பிடக் கூடாது. அல்சர் அறுவைசிகிச்சைமுன்பெல்லாம் அல்சருக்கான அறுவை சிகிச்சையில் அல்சர் நோயை ஏற்படுத்தும் அமிலம் சுரக்கும் நரம்பை துண்டித்துவிடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆற்றல் மிகுந்த மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டதால் அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. குடலில் ஓட்டை, ரத்தக்கசிவு போன்ற மிக ஆபத்தான நிலையில் இருக்கும் அல்சர் நோயாளிகளுக்கு மட்டுமே தற்போது ஆபரேஷனுக்கு அனுமதிக்கிறோம்.; ;பைல்ஸ் (Hemorrhoid) அறுவைசிகிச்சைபைல்ஸ் நோயாளிகளுக்கு, ரத்தக்கசிவு, மலச்சிக்கல், கடுமையான வலி போன்ற சிக்கல்கள் வரும். இவர்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் புண் ஆறுவதற்காக கொடுக்கப்படும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை தவறாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் வராமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைத்தவிர பெருங்குடல், சிறுகுடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், கணையத்தில் உள்ள கல் அகற்றுதல், புற்றுநோய்கட்டிகள் அகற்றும் அறுவைசிகிச்சைகள், கல்லீரல் கெட்டுப்போனால் மாற்று அறுவைசிகிச்சை போன்றவை வயிற்றில் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகள். முன்பெல்லாம் ஆல்கஹால், ஹெப்படைட்டிஸ் வைரஸ்களை கணையம் பழுதடைவதற்கு காரணமாக சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது, உடல் பருமன் நோயினால் கணையம் பழுதடைவது, ஆல்கஹாலையும் மிஞ்சிவிட்டது. இவர்களுக்கு Fatty liver என்னும் நிலை நீண்ட நாட்கள் தொடரும்பட்சத்தில் கணையம் நிரந்தரமாக கெட்டுப்போக வாய்ப்புண்டு. வயிற்றில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் கடுமையான வயிற்று வலி, வயிறு வீக்கம், தொடர்ந்து வாந்தி எடுத்தல் போன்ற நிலைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவர்கள் அறுவை சிகிச்சைக்குப்பின் அதிகப்படியான காரம், எண்ணெய், மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்கும் சிக்கன் 65, பிரியாணி, பரோட்டா என்று சாப்பிடாமல் வீட்டில் தயாரித்த மிதமான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டுவந்தாலே மீண்டும் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.சிசேரியன் செய்துகொண்டவர்கள் கவனத்துக்கு…இன்று ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல் பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம்தான் பிரசவம் நடக்கிறது. இந்த முறை பின்பற்ற ஆரம்பித்து பல வருடங்கள் ஆன பின்னரும், பெண்களைப் பொறுத்தவரை இன்னும் சந்தேகங்கள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. சிசேரியனுக்குப் பின்னான பக்க விளைவுகள் பற்றி அறிய மகளிர் நோய் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் மல்லிகா சாமுவேலைத் தொடர்பு கொண்டோம்…‘‘அறுவை சிகிச்சைக்குப்பின் உடனடி மற்றும் தாமதமான சிக்கல்கள் இரண்டுமே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடனடி சிக்கல்களாகப் பார்த்தால் அறுவைசிகிச்சையின்போது போடப்படும் தையலிலிருந்தும், பிரசவித்த பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்தும் ரத்தக்கசிவு ஏற்படும். இது 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரம் வரை வரக்கூடியது. குழந்தையை எடுத்த பின் கர்ப்பப்பை முதலில் சுருங்கி பின்னர் விரிவடைவதால், ரத்தக்கசிவு ஏற்படுகிறது. மேலும் நோயாளிக்கு ரத்தம் உறைவுத்தன்மை குறைவாக இருப்பதாலும், நஞ்சுக்கொடியை சரியாக எடுக்காமல் போனாலும், சின்ன துண்டுகள் கர்ப்பப்பையில் தங்குவதாலும் ரத்தக்கசிவு வரும். ;தாமதமான சிக்கல்கள் 36 மணி நேரத்திற்குப் பின் வரக் கூடியவை. காய்ச்சல், சிறுநீர்த்தொற்று, பிறப்புறுப்பு மற்றும் காயத்தில் ரத்தக்கசிவு போன்றவை வரக்கூடும். காய்ச்சல் அதி வெப்ப நிலையில் இருக்கும். இதற்கு காரணம் சிறுநீர்த் தொற்று. அறுவை சிகிச்சையின்போது கதீட்டர்(Katheter) ஒன்று போடுவோம். அதை போடும்போது, சரியாக போடாததாலும் அல்லது நோயாளிக்கு ஏற்கனவே நோய்த்தொற்று இருந்தால் அது கர்ப்பப்பைக்கு சென்றுவிடுவதாலும், அறுவை சிகிச்சைக்குமுன் சிறுநீர்ப்பையிலிருந்து முழுவதுமாக வெளியேற்றாததால் ஏற்படும் நோய்த்தொற்றாலும் சிறுநீர்த்தொற்று ஏற்படுகிறது. நஞ்சுக்கொடியை முழுவதுமாக நீக்காவிடில் நோயாளி வீட்டுக்குப் போன பிறகு, அதி ரத்தப்போக்கோ, காய்ச்சலோ, தையல் போட்ட இடத்தில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட வேண்டும். சிலருக்கு தையல் போட்ட இடத்தில் நோய்த்தொற்று வருவதால் நீர்க்கசிவு, ரத்தக்கசிவு உண்டாகும். அப்போது உடனே மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும். மேலும் சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்களுக்குக் குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். சரியான ஓய்வு எடுக்காவிட்டால் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும். நின்ற நிலையில் குனிந்து எடையுள்ள பொருட்களை தூக்குவதோ, மாடிப்படி ஏறுவதோ, தரையில் உட்காரவோ கூடாது. தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அப்போதுதான் சிறுநீர் பிரிந்து நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும். மலச்சிக்கலும் வராது. அதிகப்படியான ஓய்வும் ஆபத்தானது. 3 மாதங்கள் வரை மிதமான நடைப்பயிற்சி செய்யலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வழக்கம்போல் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உட்கார்ந்தே இருந்தால் வயிற்றில் சதை அதிகமாகிவிடும். ஏனெனில், வயிற்றில் சதை அதிகம் உள்ள நோயாளிகளுக்கு கால்களில் ரத்த உறைவு ஏற்படுவதற்கும், ரத்தக்குழாய் அடைப்புக்கும் சாத்தியம் உண்டு.– உஷா நாராயணன்
அறுவை சிகிச்சைக்கு பிறகு…
previous post