நன்றி குங்குமம் ஆன்மிகம் ‘‘ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் பெருகிப்பதினாறு பெரும்பேறுகளையும், செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழ்வீர்களாக’’ என வாழ்த்துவது மரபு. அறுகு ஓரிடத்தில் முளைத்து, ஆறு இடங்களிலே வேர்விட்டு நீண்டு, பரந்து, படர்ந்துகொண்டே போகும்தன்மையை உடையது. நீரில்லாத வறண்ட காலத்திலும்; வரட்சியைத் தாங்கக்கூடியது. மழைபெய்து நீர் கிடைத்ததும் துளிர்த்துச்செழித்து வளரும் பாங்கினைக் கொண்டது. மனித வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறிமாறி வருவது இயற்கையேயாகும். ஆகவே இரண்டையும் ஏற்கும் பண்பு மனிதரிடம் இருக்க வேண்டும்.விநாயகப்பெருமான் அறுகு போன்று எளிமையான தோற்றத்தில் அபாரமான தெய்வீக சக்தியைத் தம்முள் அடக்கி நம்மைக் காத்தருள்பவர். விக்கினங்களை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்து; விக்கினங்களை நீக்குபவர். குண்டலினி சக்திக்குரியவராக விளங்கும் விநாயகமூர்த்திக்கு, அதே குணம் கொண்ட அறுகம்புல்லைச் சமர்ப்பிப்பது, சாத்தி வழிபடுவது, மிகவும் ஏற்புடையதாகும்.‘‘உயிர்கள் உடலைவிட்டுப்பிரிந்ததும் வினைக்கேற்ப வேறு உடலை அடையும் பொருட்டு முதலில் புல்நுனியைப்பொருத்தி, பசு வயிற்றில் புகுந்து எருவின் வழியாகப் பயிர்களோடு பரவிப் புருஷகர்ப்பத்தில் தங்கும் என்பது உபநிடதம் தரும் கருத்தாகும்.மேற்படி கருத்தின்படி உயிர்கள் உடலை விட்டுப்பிரிந்ததும், உடன் புல்நுனியில் தங்குவதே முதல்படியாதலால் இறைவனின் படைப்பில் முதல் படைப்பாகப் பிரணவமாக ஓம் எனும் வடிவத்தையுடையவராக; ஓசை, ஒலியெலாம் ஆனவராக; பிரபஞ்சத் தோற்றத்தின் மூலகர்த்தாவாக, விளங்கும் விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் சாத்தி, அரச்சனை செய்தல் மிகவும் உகந்ததாகிறது.தொகுப்பு – எஸ்.கிருஷ்ணஜா…