அறந்தாங்கி, ஆக.22: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் 29-ம் நாள் தெப்பதிருவிழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிக்கு காவல் தெய்வமாக உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோவிலில் காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.திருவிழா தொடங்கியது முதல் நாள்தோறும் மண்டகடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
நேற்றுமுன்தினம் 29-ம் நாள் திருவிழா அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அம்மனுக்கு அலங்காரம் செய்து அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தெப்பதிருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனை தெப்பகுளத்தில் இழுத்து வந்து வழிபாடு செய்தனர். தெப்பதிருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.