தாம்பரம், ஆக.12: சேலையூர் அடுத்த கஸ்பாபுரம் கிராமத்தில், அறநிலையை துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. எனவே, இந்த நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஒரு தரப்பினர், அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் கோலாட்சி அம்மன் சிலையை கடந்த புதன்கிழமை வைத்து, கோயில் கட்ட திட்டமிட்டு, பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, இந்த கோலாட்சி அம்மன் சிலை திடீரென மாயமானது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் சிலை வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சிலையை அருகிலுள்ள 40 அடி கிணற்றில் கொண்டு சென்று போட்டு இருக்கலாம் என சில தடயங்களை வைத்து சந்தேகித்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று முன்தினம் முதல் 3 மோட்டார்கள் மூலம் சம்பந்தப்பட்ட கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.