திருச்செங்கோடு, ஜூன் 20: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆதிசைவ அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள் தான், தற்போது பூஜைகளை செய்து வருகிறோம். சுமார் 10 தலைமுறைகளாக நாங்கள் தெய்வப்பணி செய்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில், கோயில் கருவறையில் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாப்பதாக கூறி, அர்த்தமண்டபத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக, கருவறையில் உள்ள சுவாமியை படம் பிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கூட மகாமண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில்லை. ஆனால், திருச்செங்கோடு கோயிலில் மட்டும் ஆகம விதிகளை மீறி அர்த்தமண்டப பகுதிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயலாகும். இதனை கண்டித்து இன்று(நேற்று) அடையாள போராட்டம் நடத்தியுள்ளோம். இனி பக்தர்களும், நகரின் முக்கிய பிரமுகர்களும் ஆகம விதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு தேசிய சிந்தனை பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.