தா.பழூர், ஆக. 4: அணைக்கரை கீழணையிலிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 400 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வௌியேற்றப்பட்டு வருகிறது.கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்துவருவதால், அம்மாநிலத்தின் கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட ஆணைகள் நிரம்பி, அதிகளவில் உபரி நீர் காவிரியில் வௌியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையும் முழக்கொள்ளளவான 120 அடி நிரம்பியது. கர்நாடக மாநிலத்திலிருந்து உபரி நீர் வருகை, டல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கொள்ளிடம், காவிரி கரையோர மக்களுக்கு ெவள்ள அபாய எச்சர்க்கை விடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணைக்கரை கீழ் அணைக்கு வரும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 523 கன அடி நீர், வடவார் வாய்க்கால் வழியாக வீராணம் ஏரிக்கு 2,153 கன அடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்கால்களில் 412, தெற்கு ராஜன் வாய்க்கால்களில் 440, கும்கி வாய்க்கால்களில் 118 என கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 64 ஆயிரம் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீரானது இரண்டு கரையையும் தொட்டுச் செல்லும் நிலையில் ரம்மியமான காட்சியாக உள்ளது. இதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.