அரூர், அக்.27: அரூர் நகரில் உள்ள தில்லை நகர், பாட்சா பேட்டை, மேல்பாட்சா பேட்டை, வர்ண தீர்த்தம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அந்த பகுதியில் நிறுத்தியிருந்த கார்கள், டூவீலர்கள், ஆட்டோ, சரக்கு வாகனம் என மொத்தம் 31 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி பாட்சா பேட்டையை சேர்ந்த மன்சூர் என்பவர் அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அரூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்த வேலு (எ) சிங்காரவேலன்(23) என்பவர் 31 வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.